கஞ்சாவுடன் முதல்வரை பார்க்கப்போன பாஜக நிர்வாகி.. 4 பிரிவுகளில் வழக்கு - கைது
முதலமைச்சர் ஸ்டாலினிடம் கஞ்சாவுடன் மனு கொடுக்க முயன்ற பாஜக OBC மாநில செயற்குழு உறுப்பினர் சங்கரபாண்டியன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், குடும்பத்துடன் ஓய்வெடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு நேற்று வந்த முதல்வரை பாஜக OBC மாநில செயற்குழு உறுப்பினர் சங்கரபாண்டியன் சந்தித்து மனு அளிக்க முயன்றார்.
அவர் தனது மனுவில், கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போதை - கஞ்சா பழக்கம் அதிகரித்துள்ளதாகவும் இதனால் மாணவர்கள், ஏழைத் தொழிலார்கள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டை போதைப்பொருள் புழக்கத்தில் இருந்து காத்திட வேண்டும் எனவும் அதில் அவர் வலியுறுத்தியிருந்தார்.
அதோடு நில்லாமல், மனுவுடன் சேர்த்து 8 கிராம் கஞ்சா பொட்டலத்தை இணைத்திருப்பதாகவும் அவர் அதில் கூறியிருந்தார். தொடர்ந்து மனுவை கொடுக்க முயன்றபோது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி அவனியாபுரம் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அவர் மீது 294 b, 353, 506(ii) உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?