ரோடு இல்லை.. குடிநீர் இல்லை.. மின்சார வசதியில்லை.. ஓட்டு போடாமல் புறக்கணித்த நெல்லை, தஞ்சை மக்கள்

அடிப்படை வசதிகள் செய்து தராததால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நான்கு கிராமங்களை சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணித்து வாக்களிக்க செல்லாததால் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.

Apr 19, 2024 - 12:56
ரோடு இல்லை.. குடிநீர் இல்லை.. மின்சார வசதியில்லை.. ஓட்டு போடாமல் புறக்கணித்த நெல்லை, தஞ்சை மக்கள்


தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை முதலே மக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களித்து வருகின்றனர். சில கிராமங்களில் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். 

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில். தஞ்சை மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோனூர், நெல்லித்தோப்பு, சீதம்பாடி, அண்ணா தோட்டம் ஆகிய நான்கு கிராமங்கள் அடங்கி உள்ளன.

இந்த நான்கு கிராமங்களை சேர்ந்த மக்கள் குண்டும், குழியுமான சாலைகளில் கழிவு நீர் தேங்கி நின்று மக்கள் நடந்து செல்ல முடியாமல் தவித்து வருவதாக கூறுகின்றனர்.

தெருவிளக்கு இல்லாததால்  7 கி.மீ தூரம் இரவு நேரத்தில் பெண்கள் அச்சத்துடன் பாதுகாப்பு இல்லாமல் ஊருக்குள் வர வேண்டி உள்ளதாக கூறுகின்றனர். பேருந்து வசதிகள் இல்லாமல் நாள்தோறும் பள்ளி கல்லூரிக்கு செல்பவர்கள் பல கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது என கூறும் இவர்கள்

தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பல முறை மாவட்ட ஆட்சியர் உள்பட அனைத்து துறை அதிகாரிகளிடமும் மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்தனர். இன்றைய தினம் 4 கிராமங்களை சேர்ந்த 1800 வாக்காளர்கள் வாக்களிக்க செல்லாததால் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.

இதே போல திருநெல்வேலி மாவட்டத்தில் கிராம மக்கள் வாக்களிக்க செல்லாமல் புறக்கணித்துள்ளனர். நெல்லை மாவட்டம் அலவந்தான் குளத்தில் தேர்தல் புறக்கணிப்பு காரணமாக வாக்குப்பதிவு தொடங்கி சுமார் 3 மணி நேரமாகியும் வெறும் 12 வாக்குகள் மட்டுமே பதிவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்களவைத் தொகுதியில் உள்ள நெல்லை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி எண் 93ல் மொத்தம் 997 வாக்காளர்கள் உள்ளனர் இந்த வாக்குச்சவடியை சுற்றி பல்லிக்கோட்டை நெல்லை திருத்து அலவந்தான்குளம் போன்ற கிராமங்களில் பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து இந்த தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி மக்கள் ஏற்கனவே திட்டமிட்ட நிலையில் இன்று காலை 7 மணிக்கு அங்கு வாக்குப்பதிவு தொடங்கியது அதே சமயம் தேர்தல் புறக்கணிப்பு காரணமாக பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். 

11 மணி வரை அங்கு வெறும் 12 வாக்காளர்கள் மட்டுமே தங்கள் வாக்கினை பதிவு செய்து உள்ளனர். மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காமல்  கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow