புதிய குற்றவியல் சட்டங்கள்.. டோட்டல் வேஸ்ட்.. ஜெராக்ஸ் காபி என்கிறார் ப.சிதம்பரம்

புதிய குற்றவியல் சட்டங்களின் சில அம்சங்களை வரவேற்கலாம். ஆனால் இந்தச் சட்டங்கள் 90 முதல் 99 சதவீதம் வரை பழைய சட்டங்களின் நகலே தவிர வேறொன்றும் இல்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் முக்கியத் தலைவருமான ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

Jul 1, 2024 - 12:58
Jul 1, 2024 - 13:07
புதிய குற்றவியல் சட்டங்கள்.. டோட்டல் வேஸ்ட்.. ஜெராக்ஸ் காபி என்கிறார் ப.சிதம்பரம்

நாடு முழுவதும் புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதன் மூலம் கடந்த 150 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்த பழைய சட்டங்கள் முடிவுக்கு வருகின்றன. புதிய குற்றவியல் சட்டங்களுக்கு நாடுமுழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளன.

புதிய குற்றவியல் சட்டங்களின் முக்கிய அம்சங்கள் - 1. பாரதிய நியாய சன்ஹிதா, 2023: இந்திய தண்டனைச் சட்டம் 1860-க்கு மாற்றான இந்தப் புதிய சட்டத்தில் தேசதுரோகம் என்பது நீக்கப்படுள்ளது மாறாக, பிரிவினைவாதம், கிளர்ச்சி, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக தண்டனை வழங்கும் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. சிறுவர்களை கூட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்குதல் மற்றும் கும்பலாக அடித்து கொலை செய்வதற்கு மரண தண்டனை வழங்க வகை செய்கிறது. முதல் முறையாக இந்த தண்டனைகளில் ஒன்றாக சமூக சேவையும் சேர்க்கப்பட்டுள்ளது.

2. பாரதிய நாகரிக் சுரக்‌ஷா 2023: இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு மாற்றாக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, கால வரையறைக்குள் விசாரணை மற்றும் வாதங்கள் நடத்தப்பட வேண்டும். விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

3. பாரதிய சாக்ஷியா 2023: இது இந்திய சாட்சிகள் சட்டம் 1972க்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் அல்லது ஏற்றுக்கொள்ளப்படும் சாட்சிகளில், மின்னணு அல்லது டிஜிட்டல் ஆவணங்கள், மின்னஞ்சல்கள், சர்வர் பதிவுகள், கணினி, மடிக்கணினி, குறுஞ்செய்திகள், இணையதளங்கள், சம்பவம் நடந்த இடத்தின் சான்றுகள், அஞ்சல்கள், சாதனங்களில் உள்ள செய்திகள் ஆகியவை அடங்கும். வழக்கு ஆவணம், முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிக்கை மற்றும் தீர்ப்புகள் டிஜிட்டல்மயாக்கப்பட வேண்டும். காகித ஆவணங்களைப் போலவே டிஜிட்டல் மற்றும் மின்னணு ஆவணங்களும் சட்ட அங்கீகாரம், மதிப்பு, அமலாக்கத்தன்மை பெறும்.

இந்த நிலையில் புதிய குற்றவியல் தண்டனை சட்டங்கள் குறித்து முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.  ப.சிதம்பரம் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 சட்டங்கள் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.

புதிய சட்டங்கள் என்றழைக்கப்படும் இவற்றில் 90 முதல் 99 சதவீதம் வரை பழைய சட்டங்களின் நகல் என்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கெனவே அமலில் இருந்த சட்டங்களில் சில உரிய திருத்தங்களை மேற்கொண்டு அமல்படுத்தியிருக்க வேண்டியதை புதிதாக மூன்று சட்டங்களாக மாற்றி வீணான செயலை மத்திய அரசு செய்துள்ளது.

புதிய சட்டங்களில் சில மேம்படுத்தப்பட்ட விஷயங்கள் உள்ளன. அவற்றை நாங்கள் வரவேற்றுள்ளோம். ஆனால் அதனை சட்டத்திருத்தம் வாயிலாகவே செய்திருக்கலாமே.புதிய குற்றவியல் திருத்தச் சட்ட மசோதா மீது நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். சில குறிப்புகளைக் கொடுத்திருந்தனர். ஆனால் அவை கருத்தில் கொள்ளப்படவில்லை. இச்சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எவ்வித ஆக்கபூர்வமான விவாதமும் செய்யப்படவில்லை.

சட்ட நிபுணர்கள், வழக்கறிஞர்கள் கூட்டமைப்புகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் எனப் பல்துறை நிபுணர்களும் இச்சட்டத் திருத்தம் தொடர்பாக பல விமர்சனக் கட்டுரைகளை எழுதினர். மூன்று சட்டங்களின் மிக மோசமான குறைபாடுகளை அவர்கள் சுட்டிக் காட்டினர். ஆனால் அரசாங்கத்தில் ஒருவர்கூட இந்த விமர்சனங்களுக்குப் பதில் அளிக்க அக்கறை கொள்ளவில்லை.

இந்த மூன்று சட்டங்களும் போதிய விவாதமும், ஆராய்ச்சியும் இல்லாமல் பழைய சட்டங்களைத் தரைமட்டமாக்கி கட்டியெழுப்பப்பட்டுள்ளன. ஆகையால் குற்றவியல் நீதி நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதே இதன் முதல் தாக்கமாக இருக்கும். அடுத்ததாக பல்வேறு நீதிமன்றங்களிலும் இந்தப் புதிய சட்டங்களால் பல சவால்கள் உருவாகும். காலப்போக்கில், அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் நீதித் துறையின் நவீன கோட்பாடுகளுக்கு இணங்க மூன்று சட்டங்களில் மேலும் பல மேம்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்ற கட்டாயம் உருவாகும்.” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow