தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்...விண்ணைப் பிளந்த பெருவுடையார் கோஷம்...
தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், மேள தாளங்கள் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
உலகப்புகழ்பெற்ற தஞ்சைப் பெரியகோயில், ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் சோழர்களின் கட்டடக் கலை, கலாசாரம், தமிழர் பண்பாட்டை பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கோயிலைக் காண நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். உலகமே கண்டு வியக்கும் அதிசயமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கும் தஞ்சைப் பெரியகோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு சித்திரைத் திருவிழா, கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பெருவுடையார் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த நிலையில் பெரியகோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 43 டன் எடையும் 35 அடி உயரமும் கொண்ட திருத்தேரில் தியாகராசர் - கமலாம்பாள் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சிவனடியார்கள் சிவ வாத்தியங்களை இசைக்க, திருவீதிகளில் ஒய்யாரமாக பவனி வந்து கொண்டிருக்கும் தேரைக் கண்டு பக்தர்கள் எழுப்பிய ஆரூரா, தியாகேசா, பெருவுடையார் என்ற கோஷம் விண்ணைப் பிளந்த வண்ணம் உள்ளது.
தேரோட்டத்தையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
What's Your Reaction?