நாங்க ஓட்டு போட மாட்டோம்.. தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்.. அதிர்ச்சியில் அரசியல் தலைவர்கள்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தங்களது பிரச்னைகளை தீர்க்கவில்லை எனக்கூறி பல்வேறு கிராமங்களில் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

Apr 19, 2024 - 12:07
நாங்க ஓட்டு போட மாட்டோம்.. தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்.. அதிர்ச்சியில் அரசியல் தலைவர்கள்

திண்டுக்கல் மாவட்டம் சீரகம்பட்டியில் 20 ஆண்டுகளாக தார்சாலை அமைக்கவில்லை என்பது புகார். சாலை வசதி இல்லாத காரணத்தினால் ஊருக்குள் பேருந்துகள் வருவதில்லை என்பது குற்றச்சாட்டு. இதனால் கிராமத்தில் உள்ள பள்ளிக்குழந்தைகள் 3 கி.மீ வரை நடந்து பள்ளிக்குச் செல்வதாக மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். 

இந்நிலையில் இதனை கண்டித்து வீடுகளில் கருப்புகொடி கட்டியும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டும் சீரகம்பட்டி மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

இதே போல திருவள்ளூர் காட்டுப்பள்ளியில் உள்ள L&T அதானி துறைமுகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நிரந்தரப்பணி மற்றும் உழைப்புக்கு ஏற்ற சம்பளம் அளிக்கப்படவில்லை என்பது புகார். இதனால் தேர்தலை காட்டுப்பள்ளி மக்கள் புறக்கணித்த நிலையில், 150 எண் கொண்ட வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.

திருவள்ளூர் அருகே மெதூரில் தார்சாலை அமைத்துத்தரக் கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் போராட்டம் நடத்தியும் அரசு உரிய நடவடிக்கை எடுக்காததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்றைய வாக்களிப்பை புறக்கணித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆறுவழிச்சாலை அமைப்பதற்காக குமாரராஜ பேட்டையில் விவசாயநிலம், கோயில்கள் கைப்பற்றப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். இதனை காரணம் காட்டி அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்த நிலையில், கட்சிப் பிரமுகர்கள் கூட வாக்களிக்கச் செல்லாததால் வாக்குப்பதிவு மையமே வெறிச்சோடி காணப்பட்டது.

ராமநாதபுரத்தில் முன்னாள் ராணுவ வீரரை அரிவாளால் வெட்டிக்கொன்ற முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் கைது செய்யப்படாததை கண்டித்து சவேரியார்பட்டினம் - சவேரியார் சமுத்திரம் மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர். இதனால் இரு கிராமங்களிலும் வாக்குச்சாவடி மையங்களுக்கு யாருமே செல்லாத நிலை நீடித்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow