திருப்பூரில் மூதாட்டியின் கழுத்தில் கத்தியை வைத்து பணம், நகை கொள்ளை.. அடுத்து நடந்த காமெடி..
திருப்பூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் மற்றும் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் தட்டாங்குட்டை அத்திக்காடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் திருப்பூரில் உள்ள டைல்ஸ் கிரானைட் கடையில் வேலை செய்து வருகிறார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் அவரது மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். கண்ணனும் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்ப தாமதமாகும் வரை, கண்ணனின் தாயார் அம்சவேணி மட்டும் வீட்டில் தனியாக இருப்பார்.
இந்நிலையில், இரவு நேரத்தில் 3 பேர் தலைக்கவசம் அணிந்தபடி கண்ணனின் வீட்டிற்குள் திடீரென நுழைந்து தனியாக இருந்த மூதாட்டி அம்சவேணியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாகத் தெரிகிறது. பீரோ சாவி கேட்டு மிரட்டிய நிலையில் உயிருக்கு பயந்த அம்சவேணி, இடத்தைக் கூறவே அதில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் 10 சவரன் நகைகள், வெள்ளிப்பொருட்கள் என சுமார் ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கைப்பற்றினர். மேலும், வேறு எதுவும் இல்லை என மூதாட்டி கூறியதால் ஆத்திரத்தில் பீரோ உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர்.
அப்போது தாங்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் சாவியை வீட்டிற்குள் தவறவிட்ட கொள்ளையர்கள், நீண்ட நேரம் சாவியைத் தேடிப்பார்த்தனர். அந்த நேரம் வேலைக்குச் சென்ற கண்ணன் வீட்டிற்கு திரும்பிய நிலையில், அவரைக் கண்டவுடன் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர். சாவி கிடைக்காததால் இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றனர்.
இதையடுத்து கண்ணன் அளித்த தகவலின் பேரில், பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். குழந்தைகளின் கல்விக்காக வைத்திருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்ற நிலையில் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?