தமிழ்நாட்டில் வாக்கு சதவீதம் எவ்வளவு?... நாளை (ஏப்ரல் 20) நண்பகல் தான் தெரியுமாம்...
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பதிவான வாக்குகளின் சதவீதம் நாளை (ஏப்ரல் 20) நண்பகல் தான் தெரியவரும் என சத்ய பிரதா சாகு கூறியிருக்கிறார்.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல், ஒரு சில சின்ன வன்முறை சம்பவங்கள் தவிர, அமைதியான முறையில் நடந்து முடிந்ததாக கூறினார். கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் கணிசமாக உயர்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு தொடர்பான புகார்கள் வந்ததாக கூறிய சத்யபிரதா சாகு, பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு எந்த புகாரும் வரவில்லை என விளக்கம் அளித்தார். வாக்குச்சாவடிகளுக்கு மாலை 6 மணிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியிருப்பதாக கூறிய சத்யபிரதா சாகு, அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67% வாக்குகள் பதிவானதாக தெரிவித்தார். குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35% வாக்குகள் பதிவானதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார். விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 64.54% வாக்குகள் பதிவாகியிருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பதிவான வாக்கு நிலவரம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, நாளை (ஏப்ரல் 20) நண்பகல் தெரிவிப்பதாக கூறினார். கோவை, வேங்கைவயல், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் இரவு 9 மணி வரை வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டதால், முழுமையான வாக்கு சதவீதத்தை தற்போது கூற இயலாது என்றும், இரவுக்குள் அனைத்து மாவட்டங்களிலும் சரியான தகவல்கள் கிடைக்கும் என்றும் சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்தார்.
வாக்குப்பதிவு நிறைவு பெற்ற இடங்களில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சத்யபிரதா சாகு செய்தியாளர்களின் சந்திப்பின் போது குறிப்பிட்டார்.
What's Your Reaction?