கண்டெய்னர் லாரியில் வந்த மீன் கழிவுகள்.. கேரள லாரியை மடக்கி பிடித்த நாதக தம்பிகள்.. அதிகாரிகள் அதிரடி
தமிழகத்திற்கு கோழிக்கோட்டிலிருந்து மீன்கழிவுகளை ஏற்றி வந்த கர்நாடக பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியை நாம் தமிழர் கட்சியினர் மடக்கி பிடித்த நிலையில் அதிகாரிகள் அபராதம் விதித்து கேரளாவிற்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.
கேரளாவில் இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்டவை கொட்ட அனுமதி இல்லாததால் நீண்ட காலமாக தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தமிழக கேரள எல்லை பகுதிகளில் கொட்டப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இந்த கழிவுகளால் சுகாதார சீர்கேடும், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்படுவதால் எல்லையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அண்மையில் கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவி வருவதால் கேரளாவில் இருந்து கோழி, வாத்து இறைச்சிகள் தமிழகத்திற்குள் கொண்டு வருவதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டம் பகுதியில் கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி ஒன்று மீன் கழிவுகளை ஏற்றி வந்ததை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மகேஷ்வரன், விளவங்கோடு தெற்கு தொகுதி செயலாளர் சதீஷ் உள்ளிட்டோர் பார்த்தனர். உடனடியாக அந்த லாரியை தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து மீன்கழிவுகளை ஏற்ற வந்த லாரி குழித்துறை நகராட்சி குப்பை குடோன் சாலை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் குப்பை குடோனில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கழிவுகள் கொட்டுவதற்கு கொண்டு வந்திருப்பதாக நினைத்து அப்பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகள் கழிவுகளை ஏற்றி வந்த லாரி டிரைவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கண்டெய்னர் லாரியை கேரளாவிற்கே திருப்பி அனுப்பி வைத்தனர்
What's Your Reaction?