விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்ததாக எழுந்த சர்ச்சை…என்ன நடந்தது?..தேஜஸ்வி சூர்யா விளக்கம்

Apr 17, 2024 - 19:45
விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்ததாக எழுந்த சர்ச்சை…என்ன நடந்தது?..தேஜஸ்வி சூர்யா விளக்கம்

விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்ததாக எழுந்த சர்ச்சை குறித்து கர்நாடக பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா விளக்கம் அளித்துள்ளார். 

கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை விமான நிலையத்தில் இன்டிகோ விமானம் புறப்படும் போது கர்நாடக பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா எமர்ஜென்சி கதவை திறந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் குறித்து நேர்காணல் ஒன்றுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். 

தேஜஸ்வி சூர்யா கூறியதாவது, “விமானத்தின் அவசர கால கதவை தான் திறந்ததாக கூறுவது மிகவும் நகைச்சுவைக்கு உரிய விஷயம். இந்த விவகாரம் காங்கிரசின் விமர்சன கருவியாக இருந்தது. சென்னையில் இருந்து திருச்சிக்கு நாங்கள் பயணித்தது சிறிய அளவிலான மிகவும் பழைய விமானம். நான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து வலது பக்கம் எமர்ஜென்சி கதவு இருந்தது. ஆனால், அது எமர்ஜென்சி கதவு போலவே தெரியவில்லை. உடனடியாக நான் கேபின் குழுவினரை அழைத்து எமர்ஜென்சி கதவு சரியாக உள்ளதா? தொட்டு சுட்டிக் காட்டினேன். இதுதான் அங்கு நடந்தது. இதையடுத்து ஆய்வு செய்த பின் கதவு சரி செய்யப்பட்டு பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றிய பிறகு விமானம் மீண்டும் கிளம்பியது எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், “45 நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் சர்ச்சையாக ஆகியுள்ளது. அண்ணாமலையுடன் பயணம் செய்தபோது நடுவானில் எமர்ஜென்சி கதவை திறந்ததாக கூறியுள்ளனர். விமானத்தின் எமர்ஜென்சி கதவைத் திறப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. அந்தக் கதவை திறக்க நினைத்தால் சுமார் 5 நிமிடங்களாவது தேவைப்படும். அதுவரை விமானத்தில் இருந்த ஒரு பயணியாவது எனது செயலை வீடியோ எடுக்காமல் இருந்திருப்பார்களா? என யோசிக்க வேண்டும். ஆனால், அதுபோல நடக்கவில்லை. இந்த விவகாரம் சர்ச்சையாக்கப்பட்டபோது நான் பேசாமல் இருந்தது, இது ஒரு விசயமே இல்லை என்பதால்தான்” எனக் கூறினார். 

மேலும், “என்மீது எழுந்த விமர்சனம் தொடர்பாக இன்டிகோ நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினேன். அதில், விமானத்தில் நான் அவசரகால கதவை திறந்தேனா?, விமானத்தின் கட்டுப்பாடுகளை மீறி அநாகரீகமாக நடந்து கொண்டேனா? என்பது குறித்து விளக்கம் கேட்டேன். அதற்கு இது ஒரு எதிர்பாராத சம்பவம் எனவும் நான் தவறு செய்யவில்லை எனவும் இன்டிகோ நிறுவனம் எனக்கு பதில் அளித்தது. அந்த இமெயில் இப்போதும் கூட என்னிடம் உள்ளது” எனவும் தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow