ஆசிரியர்களை திமுக அரசு தொடர்ந்து வஞ்சிக்கிறது... எடப்பாடி பழனிசாமி கண்டனம்...
கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு கட்டுரைகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்த ஆசிரியை உமா மகேஸ்வரியை இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தது முதலே ஆசிரியப் பெருமக்களுக்கு அறிவித்த எவ்வித தேர்தல் வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
ஆசிரியை உமாமகேஸ்வரி என்பவர் ஊடகம் சார்ந்த ஒரு வலைதளத்தில் கல்வித்துறையில் 15,000-த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், 1,200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஓராசிரியர் பள்ளிகளாக இருப்பதாகவும், பட்ஜெட்டில் ஆசிரியர் பணி நியமனம் குறித்த அறிவிப்பு இல்லாதது, இல்லந்தோறும் கல்வி திட்டத்தில் பல நூறு கோடி ரூபாய் வீணாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் அவரை திமுக அரசு தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளதை எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியை உமாமகேஸ்வரியை இடைநீக்கம் செய்ததை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அவருக்கு உடனடியாக மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
What's Your Reaction?