பிணங்களை தோண்டி தின்னும் நாய்கள்! சென்னையில் இப்படி ஒரு அவலமா? வெளியாகிய பகீர் காட்சிகள்..!
சென்னை, ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட மூலக்கொத்தளம் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட மனித சடலங்களை தோண்டி நாய்கள் தின்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளார்.
ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட மூலக்கொத்தளம் சுடுகாட்டில் இறந்தவர்களின் உடலை அப்பகுதி மக்கள் அடக்கம் செய்து வருகின்றனர். பழைமையான இந்த சுடுகாட்டில் மொழிப்போர் தியாகிகள் புதைக்கப்பட்ட வரலாறும் உண்டு. அப்படிப்பட்ட இந்த சுடுகாட்டில் சமீபத்தில் இறந்தவர்கள் அதாவது, பணம் இல்லாத ஏழை ஏழை எளியவர்களான அனாதை பிணங்களை கொண்டு வந்து அடக்கம் செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சுடுகாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் அதிக பணம் கிடைக்காத பிணங்களை ஆறடி ஆழத்தில் புதைக்காமல், மூன்றடி ஆழத்தில் மட்டுமே புதைப்பதாகவும் இதற்கு சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலம் 5-க்கு உட்பட்ட அதிகாரிகள் துணை போவதாகவும் கூறப்படுகிறது.
மூன்றடி ஆழத்தில் புதைக்கப்படும் பிணங்களை அங்குள்ள நாய்கள் தோண்டி உண்பதால், அங்கு துர்நாற்றம் வீசுவதோடு மட்டும் இல்லாமல் அருகே உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு நோய் தொற்று ஏற்படுமோ என அச்சமடைந்து வருகின்றனர். இறந்துபோன மனித உடல்களை தின்னும் நாய்கள், மனிதர்களை கடிக்க வாய்ப்புள்ளதாகவும், அப்படி கடித்தால் ரேபிஸ் போன்ற கொடிய நோயால் மனிதர்கள் உயிர் இழக்க நேரிடும் எனவும் குற்றம்சாட்டும் சமூக ஆர்வலர்கள், இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?