2026-ல் கல்யாணம்.. இப்போ நிச்சயதார்த்தம்.. மதுரை அதிமுக வேட்பாளர் சரவணன் கலகல பிரசாரம்..

தமிழகத்தில் ஒன்று கேரளாவில் ஒன்று என இரட்டை வேடம் எடுப்பது போல சு.வெங்கடேசன் இரட்டை வேடம் போடுகிறார் என மதுரை மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் பா.சரவணன் கடும் குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார். 2026 ஆண்டு நடைபெற உள்ள திருமணத்திற்கு  இந்த நாடாளுமன்ற தேர்தல் என்பது நிச்சயதார்த்தம் போல இருக்கும் என்று கலகப்பாக பேசி வாக்கு சேகரித்துள்ளார் டாக்டர் சரவணன்.

Apr 5, 2024 - 15:32
Apr 5, 2024 - 15:33
2026-ல் கல்யாணம்.. இப்போ நிச்சயதார்த்தம்.. மதுரை அதிமுக வேட்பாளர் சரவணன் கலகல பிரசாரம்..

மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் பா. சரவணனை ஆதரித்து திருமோகூர், புதுதாமரைப்பட்டி, பூலாம்பட்டி,சிட்டம்பட்டி, மாங்குளம், அப்பன்திருப்பதி ,வண்டியூர், ஒத்தக்கடை, உத்தங்குடி ஆகிய பகுதிகளில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயளாலர் வி.வி. ராஜன் செல்லப்பா பிரச்சாரம் மேற்கொண்டார் .

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம்,மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய கழகச் செயலாளர்கள் தக்கார் பாண்டி, வாசு,கார்சேரிகணேசன் நிலையூர் முருகன், மாவட்ட கலை பிரிவு செயலாளர் அரசு, பகுதி கழக செயலாளர் வண்டியூர் செந்தில் குமார், ஒத்தக்கடை ராஜேந்திரன், ஒத்தக்கடை கார்த்திக்,சேனாபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சரவணன், "மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினராக பதவி வகித்த சு.வெங்கடேசன் 5 ஆண்டுகள் நாடாளுமன்ற நிதியிலிருந்து மக்களுக்கு செய்த திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 3 மாதங்களுக்கு முன் சு.வெங்கடேசன் 5 ஆண்டுகளில் திட்டப்பணிகள் 100 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது என கூறினார். தற்போது 90 சதவிகிதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என கூறுகிறார்.

தமிழகத்தில் ஒன்று கேரளாவில் ஒன்று என இரட்டை வேடம் எடுப்பது போல நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இரட்டை வேடம் போடுகிறார். நாடாளுமன்ற தேர்தலில் 133 வாக்குறுதிகளை எடப்பாடியார் கூறியுள்ளார். அது ஏராளமான விவசாயிகளுக்கு கூறியுள்ளார். எடப்பாடியார் கொண்டு வந்த குடிமராமத்து திட்டத்தை தேசிய அளவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை ரயில்வே நிலையம் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் விற்பனை செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். தேங்காய் எண்ணெயை ரேஷன் கடையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் .விதை ,உரம் ஆகியவற்றிக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்யப்படும். நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,000, கரும்பு குவிண்டல் ஒன்றுக்கு ரூ.6,000 அதே போல் விவசாயிகள் ஓய்வூதியமாக ரூ.5,000 வழங்கப்படும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும். 

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை அம்மா ஆட்சியில் 142 அடியாக தொடர்ந்து 4 முறையாக உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து 152 அடியாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெங்கடேசன் தனது பிரசாரத்தில் வைகை ஆற்றை தொட்டு பிரச்சாரத்தை மேற்கொண்டார். ஆனால் அந்த வைகை ஆற்றை தூய்மைப்படுத்தி, வைகை இரு கரையிலும் சாலை அமைத்தது எடப்பாடியார் அரசு. 

அதேபோல் இன்றைக்கு குடிமராமத்து திட்டத்தின் மூலம் மதுரையில் நீர் ஆதாரத்தை எடப்பாடியார் பெருக்கியுள்ளார். ஆனால் தொழிலாளருக்கும், மக்களுக்கு எதுவும் வெங்கடேசன் குரல் கொடுக்கவில்லை. உங்கள் ஆதரவுடன் நான் வெற்றி பெற்று ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக ஒரு அலுவலகம் அமைத்து அதில் இ-சேவை மையம் செயல்படுத்துவேன். அதேபோல் ஒவ்வொரு தொகுதிக்கும் ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படும். நகர் பகுதிகளில் சாக்கடை பிரச்சனை ஏற்பட்டுள்ளது அதை நிச்சயம் சரி செய்வேன்.

நான் நிச்சயம் செய்வேன் ஏனென்றால் நான் திருப்பரங்குன்றம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுது தினந்தோறும் தண்ணீரின் மூலம் மக்களுக்கு குடிநீர் வழங்கினேன். வருகின்ற 2026 தேர்தலில் எடப்பாடியார் மாபெரும் வெற்றி பெறுவார். அதற்கு இந்த தேர்தல் அச்சாரமாக அமையும். 
2026 ஆண்டு நடைபெற உள்ள திருமணத்திற்கு  இந்த நாடாளுமன்ற தேர்தல் என்பது நிச்சயதார்த்தம் போல இருக்கும்" என்று கூறினார் டாக்டர் சரவணன். எதிர்கட்சி வேட்பாளரை கடுமையாக சாடினாலும் வாக்கு சேகரித்த போது சரவணன் கலகலப்பாக பேசியது பெண் வாக்காளர்களை பெரிதும் கவர்ந்தது.

ராஜன் செல்லப்பா பேசும் போது,  "இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். ஆனால் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் எல்லாம் இழைத்து போய் உள்ளனர். இங்கு ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வெங்கடேசன் மக்களுக்காக முறையாக செயல்படவில்லை மக்கள் சேவையிலிருந்து தவறி விட்டார் மக்களுக்கான திட்டத்தை முன்வைக்கவில்லை.

மத்திய அரசு மாநிலத்திற்கு நிதி ஒதுக்கும் அந்த நிதியை சரியாக பயன்படுத்தாவிட்டால் அந்த நிதியை திரும்பி பெற்றுக் கொள்ளும். அதே போல தான், நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.12 கோடி அளவில் செலவழிக்கவில்லை. அந்த நிதிலிருந்து சாலை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்திடலாம். அதைத்தான் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சியில் வைகோ மகன் துரை போட்டியிடுகிறார். ஆனால் அவரை அழுக வைக்கின்றனர். நேரு  ரகுபதி, அன்பில் மகேஷ் ஆகிய அமைச்சர்கள் பொறுப்பாளராக உள்ளனர். அங்கு தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். ஆனால் அங்கு ஓட்டு கேட்க வந்த உதயநிதி ஸ்டாலின் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிங்கள் என்று கூறுகிறார். இப்படி கூட்டணி கட்சிகளை அழ வைத்து உள்ளனர் .

கூட்டணி கட்சிகளை திமுக  கவிழ்க்க திட்டமிட்டுள்ளனர். அந்த நிலைதான் தற்போது மதுரையில் உள்ள கம்யூனிஸ்டு வேட்பாளருக்கு உருவாக்க போகிறது. அதேபோல் உங்களிடம் ஓட்டு கேட்க வரும் திமுகவை கேளுங்கள் தாலிக்கு தங்கம் திட்டம், பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம், மடிக்கணினி திட்டம் ஆகியவற்றை ரத்து செய்து விட்டீர்களே உங்களுக்கு ஏன் ஓட்டு போட வேண்டும் என்று கேளுங்கள்" என பேசினார் ராஜன் செல்லப்பா.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow