இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. தகிக்கும் வெப்பம்.. எச்சரிக்கும் வானிலை மையம்

ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 39 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Apr 4, 2024 - 18:11
இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. தகிக்கும் வெப்பம்.. எச்சரிக்கும் வானிலை மையம்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பல ஊர்களில் 41 டிகிரி செல்சியஸ் தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. ஆங்காங்கே சில ஊர்களில் கோடை மழையும் பெய்து வருகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக லேசான மழை பெய்துள்ளது.   புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில்   அதிகபட்ச   வெப்பநிலை அநேக இடங்களில் இயல்பை விட அதிகமாக இருந்தது.  தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில  இடங்களில் 2 டிகிரி முதல் 3டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருந்தது. புதுவையில்  இயல்பை விட சற்று அதிகமாகவும், காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும் இருந்தது.

உள் மாவட்ட சமவெளி பகுதிகளில் ஒருசில  இடங்களில்   38 டிகிரி செல்சியஸ் முதல் 41டிகிரி செல்சியஸ் வரையும், கடலோரப் பகுதிகளில் 33 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாகியுள்ளது. மலைப்பகுதிகளில் 22 டிகிரி செல்சியஸ்  முதல் 30 டிகிரி  செல்சியஸ்  வரைக்கும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

ஈரோட்டில் அதிகபட்ச வெப்பம் 41.2 டிகிரி செல்சியஸ்,  கரூர் பரமத்தியில் 41 டிகிரி செல்சியஸ், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், திருச்சி, மதுரை (விமான நிலையம் & நகரம்) மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. 

கோயம்புத்தூர், தஞ்சாவூர்,   வேலூர்,  திருத்தணி மற்றும்   சென்னை மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் 38 டிகிரி செல்சியஸ் முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 38.2 டிகிரி செல்சியஸ் மற்றும்  நுங்கம்பாக்கத்தில் 36 டிகிரி  செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இன்றைய தினம் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய தமிழக  மாவட்டங்கள்,   புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளைய தினம் 7ஆம் தேதி வரைக்கும் தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரைக்கும் கடலோர        மாவட்டங்கள்         மற்றும்        அதனை     ஒட்டிய         மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு: 

இன்று முதல் 08.04.2024 வரைக்கும் தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும்,  புதுவையிலும்  அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில்  2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக  இருக்கக்கூடும்.  அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச    வெப்பநிலை வட தமிழக உள்  மாவட்டங்களில் ஒருசில  இடங்களில் 39 டிகிரி  முதல் 41 டிகிரி செல்சியஸ், உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37 டிகிரி  முதல் 39 டிகிரி செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34 டிகிரி  முதல் 37 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும்  இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow