மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா.. கோலாகல கொடியேற்றம்.. 21ல் திருக்கல்யாணம்

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. 19ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று மீனாட்சி திருக்கல்யாணமும் நடைபெறும்.

Apr 12, 2024 - 11:17
Apr 12, 2024 - 11:52
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா.. கோலாகல கொடியேற்றம்.. 21ல் திருக்கல்யாணம்

சித்திரை திருவிழா கொடியேற்றம் முதல் தேரோட்டம் வரை 12 நாட்களும் தினம் தினம் மதுரை நகர வீதிகளில் திருவிழா கோலமாக காணப்படும். இன்றைய தினம் காலையில் 9 மணிக்கு மேல் சுவாமி சன்னதியில் உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரா என முழக்கமிட்டு வணங்கினர். 

இன்றைய தினம் இரவு கற்பக விருட்ச வாகனம், சிம்ம வாகனத்திலும் சாமி,அம்மனும் உலா வருவார்கள். நாளைய தினம் 13ஆம் தேதி பூத வாகனத்திலும், அன்ன வாகனத்திலும், 14 ஆம் தேதி கைலாச பர்வத வாகனம், காமதேனு வாகனத்திலும் உலா வருவார்கள்.  15ஆம் தேதி தங்கப்பல்லாக்கு வாகனம், 16ஆம் தேதி குதிரை வாகனம், வேடர்பறி லீலை நடைபெறும். 17ஆம் தேதி ரிஷப வாகனத்தில் சுவாமியும் அம்மனும் உலா வருவார்கள். சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நடைபெறும்.

18ஆம் தேதி நந்தீஸ்வர வாகனத்திலும் யாளி வாகனத்திலும் சுவாமியும் அம்மனும் உலா வருவார்கள். 19ஆம் தேதி இரவு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். வெள்ளி சிம்மாசனத்தில் உலா வருவார்கள். 20ஆம் தேதி மீனாட்சி அம்மன் இந்திர விமானத்தில் ஏறி எட்டு திக்கும் உலா வரும் திக் விஜயம் நடைபெறும். 

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வரும் 21ஆம் தேதி ஞாயிறுக்கிழமை நடைபெற உள்ளது. அன்றையதினம் சாமியும் அம்மனும் யானை வாகனத்திலும் பூப்பல்லாக்கிலும் உலா வருவார்கள். 22ஆம் தேதியன்று சித்திரை தேரோட்டம் மாசி வீதிகளில் நடைபெறும்.  24ஆம் தேதியன்று தீர்த்தவாரியுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவடையும். 

இதனிடையே அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா வரும் 19ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் தோளுக்கினியானில் சுவாமி புறப்பாடுடன் திருவிழா தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து  20ஆம் தேதி மாலை 6 மணியளவில் தோளுக்கினியானில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்குமேல் 7 மணிக்குள் தோளுக்கினியானில் சுவாமி புறப்பாடு நடைபெறும். அன்று மாலை 6.10 மணிக்குமேல் 6.25 மணிக்குள் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்திலிருந்து மதுரைக்கு புறப்படுகிறார். 

22ஆம் தேதி மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறும். அன்றிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் தங்குகிறார். முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு 23ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறும். தங்கக்குதிரை வாகனத்தின் மீதேறி வரும் கள்ளழகர் அதிகாலை 5.51 மணிக்குமேல் 6.10 மணிக்குள் எழுந்தருள்கிறார். இந்த நிகழ்வை காண லட்சக்கணக்கான மக்கள் மதுரைக்கு வருகை தருவார்கள். சித்திரை திருவிழா தொடங்கியுள்ளதால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow