தலையில் கல்லை போட்டு ஆட்டோ டிரைவர் கொலை.. சென்னையில் கூலி தொழிலாளி கைது

சென்னையில் சாலையோரம் தூங்குவதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவரை கல்லால் அடித்து கொலை செய்த சென்டிரிங் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Apr 2, 2024 - 14:42
தலையில் கல்லை போட்டு ஆட்டோ டிரைவர் கொலை.. சென்னையில் கூலி தொழிலாளி கைது

சென்னை மாதவரம் பாரதியார் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வேலநாதன் என்கின்ற வேலவன். திருமணமாகாத இவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.  கடந்த ஒரு வாரமாக தனது பெற்றோருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வேலநாதன் மாதவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சாலை ஓரத்தில் ஆட்டோவை நிறுத்தி விட்டு அங்கேயே தூங்கி வேலை பார்த்து வந்துள்ளார். 

இன்று அதிகாலை ஆட்டோ டிரைவர் வேலநாதன் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே மாதவரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த வேலநாதன் உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 
பின்னர் சிசிடிவி காட்சியில் பதிவான அடையாளத்தை வைத்து போலீசார், மாதவரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சென்டிரிங் தொழிலாளி சிவசங்கர், 46 என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். 

முதற்கட்ட விசாரணையில் கூலி தொழிலாளி சிவசங்கரும் தனது குடும்பத்தாருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டிற்கு செல்லாமல் மாதவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையோரம் தங்கி வந்துள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுனர் வேலநாதனுக்கும் கூலி தொழிலாளி சிவசங்கருக்கும்  இடையே தங்கும் இடம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுனர் வேலநாதன் சிவசங்கரை அடித்து உதைத்துள்ளார். இதனைப் பார்த்து அப்பகுதி மக்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து நேராக மது கடைக்கு சென்ற சிவசங்கர் மது அருந்திவிட்டு டாஸ்மாக் கடை அருகே படுத்து தூங்கி விட்டு பின்னர் அதிகாலையில் நேராக மாதவரம் பேருந்து நிலையம் வந்துள்ளார்.

அங்கு சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் வேலநாதன் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.  உறங்கும் இடத்திற்காக ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் சிவசங்கரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow