கொள்ளிடம்: பெண்ணை சராமாரியாக அரிவாளால் வெட்டியவர் கைது-போலீஸ் விசாரணை

இது குறித்து மேலும் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

Dec 14, 2023 - 12:58
Dec 14, 2023 - 13:47
கொள்ளிடம்:  பெண்ணை சராமாரியாக  அரிவாளால் வெட்டியவர் கைது-போலீஸ் விசாரணை

கொள்ளிடம் அருகே பெண்ணை சராமாரியாக அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள தாண்டவன்குளம் கிராமத்தைச்சேர்ந்த ராதிகா(42) என்ற பெண்ணுக்கும், சென்னையைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு விக்னேஷ் (13) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராதிகாவின் கணவர் தமிழ்ச்செல்வனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு நடமாடமுடியாமல் இருந்து வந்துள்ளார். இதனால் ராதிகா வறுமையில் கஷ்டப்பட்டு வந்துள்ளதால் ராதிகாவின் தந்தை மன்னமூர்த்தி அடிக்கடி சென்னைக்கு சென்று மகளை பார்த்து பொருளாதார ரீதியில் உதவி செய்து வந்துள்ளார்.

சென்னை செல்லும்போது தனக்கு உதவிக்காக பாண்டியன் (60) என்பவரையும் அழைத்து செல்வாராம். இந்த பாண்டியனுக்கும், ராதிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் சென்னையில் வறுமையில் இருக்கும் மகள் ராதிகாவை தந்தை மன்னமூர்த்தி தாண்டவன்குளம் கிராமத்திற்கே அழைத்து வந்து வீடு பார்த்து குடி வைத்துள்ளார். வாடகை வீட்டில் வசித்துகொண்டே ராதிகா ஒரு மளிகைகடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

ஆனால் கள்ளக்காதலன் பாண்டியன் ராதிகா வேலைக்கு செல்லக்கூடாது என்று கூறி வந்துள்ளார். இதனை பொருட்படுத்தாமல் ராதிகா வேலைக்கு சென்றுவர நேற்று காலை வீட்டிலிருந்த ராதிகாவை பாண்டியன் அரிவாளால் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் வலது ஆட்காட்டி விரல் துண்டானது. அத்துடன் கை மற்றும் உடல் பகுதிகளில் கடுமையான வெட்டுக் காயமும் ஏற்பட்டுள்ளது. வலி தாங்காமல் ரத்தவெள்ளத்தில் துடித்துகொண்டிருந்த ராதிகாவை அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த பாண்டியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், “பாண்டியனுக்கு 2012ம் ஆண்டு இதே கிராமத்தைச்சேர்ந்த ஒரு பெண்ணை திருமணத்திற்காக நிச்சயம் செய்துள்ளனர்.ஆனால் திருமணத்திற்கு முன்பாகவே அந்த பெண்ணின் நடத்தையில் சந்தேகம் கொண்ட பாண்டியன் வெட்டி கொலை செய்துள்ளார்.அந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதும் தெரியவந்து போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து மேலும் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

-ஆர்.விவேக் ஆனந்தன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow