மயிலாடுதுறை: களிமண் மூட்டைகளால் தற்காலிக டிவைடர் - வாகன ஓட்டிகள் அவதி

பிரச்னைகள் அதிகம் ஏற்பட்டால் டிவைடர் அமைக்கும் முயற்சி கைவிடப்படும்.

Dec 14, 2023 - 13:07
Dec 14, 2023 - 13:48
மயிலாடுதுறை: களிமண் மூட்டைகளால் தற்காலிக டிவைடர் - வாகன ஓட்டிகள் அவதி

மயிலாடுதுறை மேம்பாலத்தில் களிமண் மூட்டைகளை வைத்து தற்காலிக டிவைடர் அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.இதனால் விபத்துக்கள் அதிகரித்திருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், தலைநகரமான பின்னர் அரசு அலுவலகங்கள் அதிகரிப்பு, மக்கள் தொகை பெருக்கம், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என போக்குவரத்து நெருக்கடி அதிகமாகி பெரும் சிரமமான சூழல் ஏற்பட்டுள்ளது. தினமும் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷன் பகுதியில் மயிலாடுதுறை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு சாலையின் நடுவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் களிமண் மூட்டைகள் வைத்து சாலையை இரண்டாக பிரித்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்களிடம் பேசினோம். “இது மாதிரி டிவைடர் அமைத்தால் விபத்துகள் குறையும் என்கிற நோக்கில் நிரந்தர டிவைடர் அமைப்பதற்கு முன் சோதனை முயற்சியாக இது மாதிரி களிமண் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் களிமண் மூட்டைகளுக்கு பதிலாக ஆற்று மணல் மூட்டைகளைத்தான் அடுக்குவார்கள். இங்கே களிமண் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளதால் மழை பெய்யும்போது அது கரைந்து சாலைகளில் வழிந்தோடி இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது. அத்துடன் கனரக வாகனங்கள் இந்த களிமண் மூட்டைகளை ஒரு பொருட்டாக மதிக்காமல் அதன் மீது ஏறிச்செல்கின்றனர்.

இந்த பாலம் 50 வருடங்களுக்கு முன்பு அப்போதைய போக்குவரத்திற்கு ஏற்றார்போல் குறுகியதாக கட்டப்பட்டுள்ளது. அகலம் குறைவான இந்த பாலத்தை டிவைடர் மூலம் இரண்டாக பிரித்தால் அது மேலும் அதிக போக்குவரத்து நெரிசலை உண்டாக்கும். அத்துடன் விபத்துக்களும் அதிகரிக்கும். கனரக வாகனங்கள் அதிக பாரத்துடன் பாலத்தில் மெதுவாக ஏறும்போது மற்ற வாகனங்கள் அதன் பின்னால் காத்திருக்கவேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் விபத்தை குறைக்கிறோம் என்றபடி கடமைக்கு இது மாதிரி களிமண் மூட்டைகளை அடுக்கி டிவைடர் ஏற்படுத்தியுள்ளனர். இதனால் ஏற்பட்டுவரும் பாதிப்புகளையும் கண்டுகொள்வதில்லை. இந்த ‘டிவைடர்’ அமைப்பது குறித்து உரிய ஆலோசனை செய்து அது தேவையா? தேவையில்லையா? என்பது குறித்து அதிகாரிகள் முடிவு செய்யவேண்டும்.” என்றனர்.

இது குறித்து மயிலாடுதுறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளோ, “இது சோதனை முயற்சிதான். இதனால் பிரச்னைகள் அதிகம் ஏற்பட்டால் டிவைடர் அமைக்கும் முயற்சி கைவிடப்படும். விபத்துகளை குறைக்க வேறு என்ன செய்யலாம்? என்றும் ஆலோசிக்கவுள்ளோம்.” என்றனர்.

-ஆர்.விவேக் ஆனந்தன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow