ஆவடி நாசருக்கு எதிரான வழக்கு -ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

நாசர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளதால், விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து பூந்தமல்லி நீதிமன்றம் பரீசிலிக்கும்படியும் உத்தரவு

Dec 14, 2023 - 12:51
Dec 14, 2023 - 13:45
ஆவடி நாசருக்கு எதிரான வழக்கு -ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

திமுகவை சேர்ந்த முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசருக்கு எதிரான தேர்தல் தகராறு தொடர்பான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், ஆவடி  தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட நாசர், வாக்களர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாகவும், தடுக்க முயன்ற தன்னை ஆபாசமாக பேசியதுடன், காரை ஏற்ற முயற்சி செய்ததாகவும் அதிமுக-வைச் சேர்ந்த தீனதயாளன் என்பவர் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், ஆவடி நாசர் மீது மிரட்டல், அவதூறாக பேசுதல், தாக்க முயற்சித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆவடி போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பூந்தமல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஆவடி நாசர் தரப்பில் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, ஆவடி நாசர் தரப்பில் தனக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தெளிவற்றதாக உள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து நீதிபதி, விசாரணையின் போது மட்டுமே குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறை நிருபிக்கமுடியும் என்பதால், ஆவடி நாசர் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறி, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை  தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், நாசர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளதால், விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து பூந்தமல்லி நீதிமன்றம் பரீசிலிக்கும்படியும் உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow