5 பெத்தும் அனாதை... கல்லான பிள்ளை மனம்... நடு வீதியில் நிற்கும் பெற்றோர்
வயதான பெற்றோரின் மருத்துவ சேமிப்பு பணத்தை அபகரித்த மகன்
சிவகங்கை அருகே மருத்துவ சிகிச்சைக்காக சிறுக, சிறுக சேர்த்து வைத்த பணத்தை மகன் அபகரித்து வெளிநாடு சென்றதால், என்ன செய்வது என்று தெரியாமல் வயதான தம்பதி சாலையில் நிர்கதியாக நிற்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
காளையார் கோயில் அருகே நெடுங்குளத்தில் மணி என்பவர் கொல்லம் பட்டறை அமைத்து பிழைப்பு நடத்தி வந்தார். இவருக்கு நாலு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். வயதான நிலையில் இவர், மருத்துவ செலவிற்காக தனது உழைப்பின் மூலம் அஞ்சலகத்தில் சிறுக சிறுக என 5 லட்சம் ரூபாயை சேமித்து வைத்திருந்திருக்கிறார்.
வயதான நிலையில் இவருக்கு கண் பார்வை மங்கியது. அவரது மனைவிக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதால் மருத்துவ செலவிற்காக தான் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுக்க மகனுடன் சென்றிருக்கிறார். அப்போது கையெழுத்து வாங்கி முழுதொகையையும் எடுத்துக் கொண்டு, எதுவும் சொல்லாமல் மணியின் மகன் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார்.
மற்ற பிள்ளைகளும் உதவாத நிலையில், ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் சாலையில் நிர்கதியாக இந்த வயதான தம்பதி தவித்து வருகின்றனர். இந்த நிலையில், தங்கள் பணத்தை மகன், மருமகளிடம் இருந்து மீட்டுத்தரக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை இவர்கள் நாடியுள்ளனர்.
பெத்தமனம் பித்து; பிள்ளை மனம் கல்லு என்ற வார்த்தைக்கு உதாரணமாக அமைந்திருக்கிறது இந்த சம்பவம். மகனின் சுயநலத்தால் மனம் கலங்கி நிற்கும் இந்த வயோதிக தம்பதியின் கண்ணீரை காவல் கண்காணிப்பாளராவது துடைப்பாரா என்று காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
What's Your Reaction?