திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் நகைகள் திருட்டு - கைவரிசை காட்டிய அர்ச்சகர்
கோவில் பொறுப்பாளர் அளித்த புகாரில் திருவேற்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் அம்மனின் கழுத்தில் இருந்த மாங்கல்யம், தாலி சங்கிலி ஆகியவை திருடப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை அருகே திருவேற்காடில் அமைந்துள்ளது ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம். பிரசித்திபெற்ற இந்தக் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம்.இந்நிலையில், கருவறையில் உள்ள உற்சவர் கருமாரியம்மன் சிலையில் இருந்த 8 சவரன் மதிப்புள்ள தாலிச் சங்கலி மற்றும் திருமாங்கல்யம் மாயமாகியுள்ளது. இதனைக் கண்ட கோயில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து விசாரணை நடத்தியதில் கோயிலில் தினக்கூலியாக பணியாற்றும் அர்ச்சகர் சண்முகம் என்பவர் நகைகளைத் திருடியது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கோயில் பொறுப்பாளர் கனகசபரி அளித்த புகாரின் பேரில், திருவேற்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அம்மன் கழுத்தில் இருந்த நகை திருடப்பட்ட சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் கோயில் நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
What's Your Reaction?