Manjummal Boys: ”இதுதான்யா ஒரிஜினல் குணா குகை… அப்போ மஞ்சும்மல் பாய்ஸ்ல வர்றது?!!”

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் வெற்றியால் கொடைக்கானல் குணா குகைக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஒரிஜினல் குணா குகையின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Mar 5, 2024 - 13:33
Manjummal Boys: ”இதுதான்யா ஒரிஜினல் குணா குகை… அப்போ மஞ்சும்மல் பாய்ஸ்ல வர்றது?!!”

கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டையை அதகளம் செய்து வருகிறது மஞ்சும்மல் பாய்ஸ் ஃபீவர். மலையாளத்தில் உருவான இந்தப் படம் டப்பிங் செய்யாமலேயே தமிழ்நாட்டிலும் வெளியானது. முதல் மூன்று நாட்கள் வரை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் காத்து வாங்கிய மஞ்சும்மல் பாய்ஸ், கடந்த வாரம் முதல், தமிழக தியேட்டர் உரிமையாளர்களின் வயிற்றில் பாலை வார்த்தது. ரஜினியின் லால் சலாம் கூட கோலிவுட் ரசிகர்களிடம் எடுபடாமல் போக, பெரிய மாஸ் ஹீரோக்கள் இல்லாமலும் மஞ்சும்மல் பாய்ஸ் கொடுத்த வைப், கொடைக்கானல் வரை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

 ஆம்! கொடைக்கானலின் குணா குகையை பின்னணியாக வைத்து உருவான இந்தப் படத்தில், ‘கண்மணி அன்போடு பாடலை கச்சிதமாக வைத்து கல்லா கட்டிவிட்டார் இயக்குநர் சிதம்பரம். மஞ்சும்மல் பாய்ஸ் கதை என்னவோ உண்மைச் சம்பவமாக இருந்தாலும், படத்திற்கு மொத்தமாக உயிர் கொடுத்துள்ளது இளையராஜாவும் கமல்ஹாசனும் தான். ஆனாலும், அவர்களுக்கு பாட்ஷா பட ஸ்டைலில் முத்தமிட முடியாத விரக்தியில் இருக்கும் ரசிகர்கள், கொடைக்கானல் குணா குகைக்கு படையெடுத்து வருகின்றனர்.

அப்படி கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாக, கும்பல் கும்பலாக மக்கள் படையெடுப்பதை பார்த்து குணா குகையே வாயை பிளந்தபடி ஆச்சரியப்பட்டு நிற்கிறதாம். ஆனால் உண்மையான குணா குகையை முழுமையாக பார்க்க முடியாதபடி இரும்புக் கம்பிகள் மூலம் குகைப் பகுதி முழுவதும் மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கு சென்றவர்கள் தூரத்தில் இருந்தே குணா குகையை பார்த்துவிட்டு திரும்புகின்றனர். இருப்பினும் அவர்களால் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் வரும் ஒரிஜினல் குகையை பார்க்க முடியவில்லை என்ற வருத்தமும் உள்ளது. 

உண்மையை சொல்ல வேண்டுமானால் மஞ்சும்மல் பாய்ஸில் வரும் குணா குகையே முழுவதும் செட் போட்டு தான் எடுத்தார்களாம். அவர்களுக்கே பெர்மிஷன் கொடுக்காத நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் குணா குகையை பார்க்க அனுமதி கிடைக்குமா என்ன..? இருந்தாலும் அவர்கள் குணா குகை பகுதிகளில் ஜாலியாக ரவுண்ட் அடித்துவிட்டுச் செல்கின்றனர்.  

மஞ்சும்மல் பாய்ஸ் ஃபீவர் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீளும் என்பதே கொடைக்கானல் பகுதி வியாபாரிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. சம்மர் சீசனுக்கு முன்பே கொடைக்கானலில் பயணிகள் குவிந்து வருவதால், விரைவில் குணா குகை பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் என செய்திகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow