தூய்மைப் பணியாளர்களுக்கு மாஸ்க் உள்ளிட்ட பொருட்கள்- சென்னை மாநகராட்சி ஆணையர் ஐகோட்ட்டில் தகவல்

50 முதல் 60 சதவீதம் மக்கள் வீடுகளிலேயே குப்பைகளை தரம் பிரித்து கொட்டப்படுகிறது

Dec 16, 2023 - 12:45
Dec 16, 2023 - 21:35
தூய்மைப் பணியாளர்களுக்கு மாஸ்க் உள்ளிட்ட பொருட்கள்- சென்னை மாநகராட்சி ஆணையர் ஐகோட்ட்டில் தகவல்

மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாஸ்க், கிளவுஸ், ஷூ-க்கள் பயன்படுத்தாமல் இருந்தால் அதிகாரிகளுக்கு ஜெயில் தண்டனை விதிக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பிளாஸ்டிக் தடை உத்தரவை எதிர்த்த மறு ஆய்வு வழக்குகள், நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் வீடியோ கால் மூலம் ஆஜராகியிருந்தார்.

அப்போது, மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை பிரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள், வெறுங்கைகளில் குப்பைகளை பிரிப்பது குறித்து அதிர்ச்சி தெரிவித்த நீதிபதி ஆஷா, குப்பைகளை சேகரிக்கும் இடங்களிலேயே அவற்றை தரம் பிரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர், 50 முதல் 60 சதவீதம் மக்கள் வீடுகளிலேயே குப்பைகளை தரம் பிரித்து கொட்டுவதாகவும், மற்றவர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், குப்பைகளை பிரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் தூய்மைப் பணியாளர்களுக்கு கிளவுஸ், மாஸ்க், ஷூ-க்கள் வழங்கப்படுவதாகவும், ஆனால் இந்த உபகரணங்களை பயன்படுத்துவது அசவுகரியமாக இருப்பதாக பணியாளர்கள் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

உபகரணங்களை பயன்படுத்தாவிட்டால், உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளை நீதிமன்றம் சிறையில் தள்ளும் என, பணியாளர்களிடம் கூறியதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow