திமுக உட்கட்சி பூசல்.. அறந்தாங்கியில் அமைச்சர் திறந்து வைத்த தண்ணீர் பந்தல்.. கொளுத்தி விட்ட உ.பிக்கள்
மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் வைத்தால் உட்கட்சி பூசலால் அதை தீ வைத்து கொளுத்தியுள்ளனர் திமுக உடன் பிறப்புகள். அறந்தாங்கியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த அமரடக்கி கிராமத்தில் திமுகவினர் இரண்டு பிரிவுகளாக நேற்று முன்தினம் தண்ணீர் பந்தல் திறந்துள்ளனர். இதனை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் அவரது தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்துரை ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். அதில் நெசவாளர் அணி சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்ததற்கு, மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த இடத்திலிருந்து தண்ணீர்ப் பந்தலை, மாவட்ட கவுன்சிலர் ராமநாதன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மாற்றியுள்ளனர்.
இந்நிலையில், ராமநாதனுக்கு சொந்தமான கட்டடத்தில் இருந்த அந்த தண்ணீர் பந்தலை, நேற்று (மே 2) இரவு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துவிட்டுத் தப்பியோடினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
அதில், ஐந்து நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு தண்ணீர் பந்தலை நோக்கி நள்ளிரவில் வருவதும் பின்பு தண்ணீர் பந்தலை தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. இதனையடுத்து அந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் மாவட்ட கவுன்சிலர் ராமநாதன் இதுகுறித்து ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், ஏற்கனவே தனது காம்ப்ளக்ஸில் தண்ணீர் பந்தல் அமைப்பதற்கு நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி சுரேஷ் எதிர்ப்பு தெரிவித்தர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் உரிய விசாரனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் புகார் மனு அளித்துள்ளார். உட்கட்சிப் பூசலால், தண்ணீர் பந்தலை முகமூடி அணிந்த நபர்கள் தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?