மோடி மீது நடவடிக்கை எடுங்க.. தேர்தல் ஆணையத்திற்கு பறக்கும் அஞ்சல் கடிதங்கள்.. மனிதநேய மக்கள் கட்சி புகார்
இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்ததாக, பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனித நேய மக்கள் கட்சி சார்பில் அஞ்சல் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பொதுமக்களின் சொத்துகளையும், தங்கத்தையும் கணக்கெடுத்து, அவற்றை அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கும் நாட்டில் சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கும் பகிர்ந்து அளிக்க காங்கிரஸ் கட்சி விரும்புவதாக பேசியிருந்தார்.
இது இஸ்லாமியர்களுக்கு எதிரான மத வெறுப்பு பிரசாரமாக உள்ளது எனக் கூறி எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பிரதமர் மோடிக்கு எதிராக அஞ்சல் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன் தலைமையில் அக்கட்சியினர் பெரம்பலூர் தலைமை அலுவலகத்தில் இருந்து அஞ்சல் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பினர்.
அந்தப் புகாரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக மத பிரசாரம் செய்த பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது
What's Your Reaction?