EVM - VVPAT 100% சரிபார்ப்பு.. உச்சநீதிமன்றம் வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள் என்னென்ன?

EVM - VVPAT 100% சரிபார்ப்பு மற்றும் பழைய காகித வாக்களிப்பு முறைக்கு மாற உத்தரவிடக் கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Apr 26, 2024 - 11:17
Apr 26, 2024 - 12:12
EVM - VVPAT 100% சரிபார்ப்பு.. உச்சநீதிமன்றம் வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள் என்னென்ன?

இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், இன்று(26.04.24) 2ம் கட்டமாக கேரளா, கர்நாடகா, மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் விவிபேட் என்ற ஒப்புகைச் சீட்டையும் 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. முன்னதாக, இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது, ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளது என உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்தார். தொடர்ந்து, மக்களவைத் தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் இவ்வழக்கில் இன்று(26.04.24) உச்சநீதிமன்றம் தீர்ப்பளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, மிகுந்த எதிர்பார்ப்புக்கு நடுவே இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில், நீதிபதி கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காகித வாக்கெடுப்பு, EVM - VVPAT 100% சரிபார்ப்பை வலியுறுத்திய அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து, இரு வழிகாட்டுதல்களை வெளியிடுவதாக அறிவித்த நீதிபதி கண்ணா, சின்னம் பதிவுசெய்யும் பணி முழுமையாக நடைபெற்ற பின், அதற்கு சீல் வைத்து, 45 நாட்களுக்கு பத்திரமாக வைத்திருக்க வேண்டும் எனக்கூறினார்.

வேட்பாளர்கள் கோரிக்கைக்கு இணங்க, தேர்தல் முடிவுகளுக்குப்பின், EVM-ல் உள்ள மைக்ரோகண்ட்ரோலர் burnt memory-ஐ பொறியாளர்கள் கொண்ட குழு சோதனை செய்யலாம் எனவும் அவர் அடுத்த வழிகாட்டுதலை வெளியிட்டார். தேர்தல் முடிவு வெளியான 7 நாட்களுக்குள், 2ம் மற்றும் 3ம் இடங்களைப் பிடிக்கும் வேட்பாளர்கள் இந்த சோதனைக்கு வலியுறுத்தலாம் எனவும் அவர் கூறினார். இதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட வேட்பாளர்களே பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், EVM-ல் பிழை கண்டறியப்பட்டால், அந்த தொகை திருப்பித் தரப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும், ஒப்புகைச் சீட்டை எண்ணுவதற்கு மின்னணு இயந்திரம் மற்றும் ஒவ்வொரு சின்னத்திற்கும் ஒரு பார்கோடு வைக்க முடியுமா என்பதை ஆராய, தேர்தல் ஆணையத்தை நீதிபதி கண்ணா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு நடுவே பேசிய நீதிபதி தத்தா, ஒரு அமைப்பின் மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது, தேவையற்ற சந்தேகங்களுக்கு வழிவகுக்கும் எனக்கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow