ஜெகன் மோகன் ரெட்டி தோற்றுவிட்டார்.. முதலீடுகள் பூஜ்ஜியம்.. வெளுத்து வாங்கிய அமித் ஷா..

May 5, 2024 - 21:02
ஜெகன் மோகன் ரெட்டி தோற்றுவிட்டார்.. முதலீடுகள் பூஜ்ஜியம்.. வெளுத்து வாங்கிய அமித் ஷா..

ஆந்திர மக்களின் உயிர்நாடியான போலவரம் திட்டத்தை நிறைவேற்றுவதில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தோல்வி அடைந்துவிட்டார் என உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார். 

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில் நாளை மறுநாள் 3வது கட்டமாக 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொடர்ந்து வரும் 13-ம் தேதி ஆந்திரா உட்பட 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறகிறது. மேலும், அதனுடன் ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. 

இந்த நிலையில், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக, தற்போது தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், அனந்தபூர் மாவட்டம் தர்மவரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய அமித் ஷா, "ஆந்திராவில் நிலவும் ஊழல் மற்றும் அராஜகத்தை ஒழிக்க பாஜக, தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.  ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கவே வந்துள்ளேன். ஆந்திர  மாநிலத்தில் நில அபகரிப்பு, நில மாஃபியாவை தடுக்கவும் திருமலை ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமியின் புனிதத்தை மீட்டெடுக்கவும், ஆந்திராவின் தலைநகராக அமராவதியை கொண்டு வரவும் கூட்டணி அமைத்துள்ளோம்" எனத் தெரிவித்தார். 

மேலும், "ஆந்திர மக்களின் உயிர்நாடியான போலவரம் திட்டத்தை நிறைவேற்றுவதில் ஜெகன் மோகன் ரெட்டி முற்றிலும் தோல்வியடைந்துவிட்டார்.  மத்திய அரசு நிதியை வழங்கினாலும், ஜெகன் மோகன் ரெட்டி நிதியை தவறாக பயன்படுத்தியுள்ளார். அதனால் போலவரம் திட்டம் மிகவும் தாமதமாகிறது.  சட்டப்பேரவை தேர்தலில் மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவையும் மத்தியில் மோடியையும் ஆட்சியில் அமர்த்தினால் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் போலவரம் திட்டத்தை நிறைவேற்றுவோம்" எனவும்  அமித்ஷா உறுதியளித்தார்.  

தொடர்ந்து பேசிய அமித் ஷா, "ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்த பிறகு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.  முதலீடுகள் பூஜ்ஜியமாகிவிட்டன. மாநிலத்தின் கடன் மொத்தமாக ரூ.13 லட்சம் கோடியை எட்டியுள்ளது.  அரசுப் பள்ளிகளை ஜெகன் மோகன் ரெட்டி ஆங்கில வழிக் கல்வியாக்கினார், இதனால் தெலுங்கு மொழியின் இருப்பு இல்லாமல் போனது.  ஆரம்பக் கல்வி தாய்மொழியில் இருக்க வேண்டும்.  எனவே, மீண்டும் தெலுங்கு மீடியத்தை அறிமுகப்படுத்துவோம். பாஜக இருக்கும் வரை தெலுங்கு மொழியை யாராலும் அழிக்க முடியாது என சூளுரைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow