ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்.. மீண்டும் சம்மன்?.. சிக்கலில் நயினார் நாகேந்திரன்?
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நெல்லை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் வழங்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை முன்னிட்டு வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினர். அந்த வகையில் கடந்த 6-ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.4 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்ததில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் எனவும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த 22-ம் தேதி தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், நயினார் நாகேந்திரனுக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஜெயிக்கர் டேவிட் ஆஜராகி 10 நாட்கள் கால அவகாசம் கேட்டு கடிதம் அளித்தார்.
இதையடுத்து நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் மற்றும் முருகனின் நண்பர்கள் ஜெய்சங்கர், ஆசைத் தம்பி ஆகியோரிடம் போலீசார் நேற்று (ஏப்ரல் 23) விசாரணை நடத்தினர். அப்போது பணத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் 3 பேர் பணம் எடுத்து வருவதாகவும் அவர்களின் பாதுகாப்புக்கு 2 பேரை அனுப்பும்படி நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் கேட்டுக் கொண்டதன் பேரில், ஜெய்சங்கரையும் ஆசைத்தம்பியையும் ரயில் நிலையத்திற்கு அனுப்பியதாகவும் முருகன் வாக்குமூலம் அளித்தார்.
இந்த நிலையில், ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் வழங்கப்பட உள்ளது. நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டன் ஆகிய இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என தாம்பரம் போலீசார் நாளை (ஏப்ரல் 25) சம்மன் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?