விக்ரமன் வீட்டிற்கு போன அமைச்சர் மா.சுப்ரமணியன்.. சிவகாசிக்கு ஆறுதல் சொல்ல போகலையே?.. நெட்டிசன்கள் கேள்வி
சினிமா இயக்குநர் விக்ரமன் வீட்டிற்கு மருத்துவ குழுவினருடன் சென்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற செல்லாதது ஏன் என்று சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியை சேர்ந்தவர் சரவணன்(55). இவர் செங்கமலப்பட்டி அருகே சுதர்சன் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். நாக்பூரில் உள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை(பெசோ) உரிமம் பெற்று நடத்தி வரும் பட்டாசு ஆலையில் உள்ள 20க்கும் மேற்பட்ட அறைகளில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த பட்டாசு ஆலையில் கடந்த வியாழக்கிழமை (மே 9) பிற்பகல் 2 மணிக்கு உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. அந்த பயங்கர வெடி விபத்தில் மத்தியசேனை சந்திரசேகர் மகன் ரமேஷ்(31), சந்திவீரன் மனைவி வீரலட்சுமி(48), வி.சொக்கலிங்கபுரம் குருசாமி மகன் காளீஸ்வரன்(47), சிவகாசி ரிசர்வ்லைன் மச்சக்காளை மனைவி முத்து(52), மாயாண்டி மனைவி ஆவுடையம்மாள்(75), சக்திவேல் மனைவி வசந்தி(38), இந்திரா நகர் கணேசன் மனைவி பேச்சியம்மாள் (எ) ஜெயலட்சுமி(22), லட்சுமி(43), விஜயகுமார்(30), மத்திய சேனையை சேர்ந்த கீதாரி மகன் அழகர்சாமி ஆகிய 10 பேர் உயிரிழந்தனர். இதில் ஆவுடையம்மாள், அவரது மகள் முத்து, மருமகள் பேச்சியம்மாள் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
சிவகாசி ரிசர்வ் லைன் மாரீஸ்வரன் மனைவி மல்லிகா(35), மூக்கன் மகன் திருப்பதி(47), மகாலிங்கம் மகன் கண்ணன்(30), ஆலமரத்துப்பட்டி லட்சுமணன் மகன் சுப்புலட்சுமி(62), அய்யம்பட்டி ராமமூர்த்தி மனைவி நாகஜோதி(35), சித்திவிநாயகர் மனைவி மாரியம்மாள்(50),மத்தியசேனை செல்வம் மனைவி இந்திரா(48), ரெங்கசாமி மகன் ஜெயராஜ்(42), முருகன் மனைவி ரெக்கம்மாள்(40), பெருமாள் மகன் அழகுராஜா(30), அழகுராஜா மகன் அம்சவல்லி(32), சுரேஷ் மனைவி செல்வி(39), நாச்சான் மனைவி வீரலட்சுமி(35), ராஜாமணி மகன் மோகன்ராஜ்(35) ஆகியோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணன், மேலாளர், போர்மேன் மற்றும் பட்டாசு ஆலையை லீசுக்கு எடுத்து நடத்தி வந்த முத்துகிருஷ்ணன் ஆகிய 4 பேர் என் மீது சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விதிகளை மீறி பட்டாசு ஆலை செயல்பட்டதால் ஆலையின் நாக்பூர் உரிமத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு (PESO) அமைப்பு ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலோடு இரு நாட்களில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு அறிவிக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான அனைத்து உதவிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
இதனிடையே மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சிவகாசிக்கு சென்று பட்டாசு விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற நேரில் செல்லாதது ஏன் என்று இணைய தளத்தில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு காரணம் இயக்குநர் விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாக இருந்த போது, மருத்துவ குழுவினருடன் அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
மூத்த மருத்துவர்களை அழைத்து சென்ற மா. சுப்ரமணியன் ஜெயப்பிரியாவின் உடலை பரிசோதிக்க கூறியதுடன், அவருக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கவும் நடவடிக்கை எடுத்தார். சிவகாசியில் ஏழை தொழிலாளர்கள் பலர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்துள்ளனர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அவர்களின் குடும்பத்தினருக்கு இப்போது நிதி உதவி எதுவும் உடனடியாக கிடைக்க வாய்ப்பு இல்லை. இந்த சூழ்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்கலாம். உயர்தர சிகிச்சைக்காக உத்தரவிட்டிருக்கலாம் என்றும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து கூறியுள்ளனர். என்ன செய்யப்போகிறார் அமைச்சர் மா.சுப்ரமணியன்? தொழிலாளர்களின் துயர் துடைக்க சிவகாசிக்கு செல்வாரா?
What's Your Reaction?