எந்த கூட்டணியா? ஜனவரியில் சொல்றோம்.. பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
”தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமைக்கும், ஜனவரியில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம்” என ஓசூரில் பிரேமலதா பேட்டியளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தேமுதிகவின் ஓசூர் மாநகர மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேமுதிகவின் ஓசூர் மாநகர மாவட்ட செயலாளர் ராமசாமி ரெட்டி தலைமையில் நடந்த கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் சுதீஷ் ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.
பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரேமலதா கூறுகையில், "உள்ளம் தேடி, இல்லம் நாடி" என்ற தலைப்பில் மாவட்டந்தோறும் தொண்டர்களை, பொது மக்களை சந்தித்து வருவதன் தொடர்ச்சியாகவே தற்போது ஓசூருக்கு வந்துள்ளோம். கேப்டன் அறக்கட்டளை மூலம் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி பல்வேறு உதவிகளை வழங்க உள்ளோம்.
வருகிற ஆகஸ்ட் 22-ஆம் தேதி மறைந்த கேப்டன் (விஜயகாந்த்) பிறந்தநாளையொட்டி, உலகம் முழுவதும் அவர் நடித்த 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் மீண்டும் வெளியிடப்பட உள்ளது. இது அவரது 100-வது படமாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாகும்” என்றார்.
கூட்டணி குறித்த கேள்விக்கு, “ஜனவரி 9-ஆம் தேதி தேமுதிக சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கூட்டணி குறித்த எங்கள் நிலைப்பாட்டினை அறிவிப்போம். தேமுதிக பங்குபெறும் கூட்டணியே தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்” என்றார்.
தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்த அறிவிப்பு பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு, பின்னர் எனது கருத்தை தெரிவிக்கிறேன் என குறிப்பிட்ட பிரேமலதா, மாணவர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் தமிழக அரசின் கல்விக் கொள்கை இருப்பின் தேமுதிக அதை வரவேற்கும் என்றார்.
வாக்காளர் பட்டியலில் குளறுபடி, தமிழகத்தில் வட மாநிலத்தவர்களின் பெயர் சேர்க்கப்படுவது குறித்தான கேள்விக்கு, ’வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் வேலை செய்யலாம். ஆனால், அவர்களின் வாக்குகள் சொந்த ஊர்களில் இருக்க வேண்டும்’ என்றார்.
”ஆணவக்கொலைக்கு எதிரான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு. தேமுதிக சாதி பார்ப்பதில்லை. தொகுதியில் பெரும்பான்மை சாதியைப் பார்த்து நாங்கள் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை. சட்டம் மிக வலிமையாக இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீர்கெட்டுள்ளது. கஞ்சா, மது போன்ற போதைப் பொருட்கள் தான் இதற்கு காரணம்” என குறிப்பிட்டார் பிரேமலதா விஜயகாந்த்.
அதிமுகவின் கே.சி.வீரமணியுடனான சந்திப்பு குறித்து பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு, “நாங்கள் கே.சி.வீரமணியின் ஓட்டலில் தங்கியதால், அவர் மரியாதை நிமித்தமாக எங்களை சந்தித்தார்.. அவ்வளவுதான்” என்றார்.
What's Your Reaction?






