சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் குழு ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவு
நன்கொடை வசூலிக்கும் தொகைக்கு உரிய ரசீது வழங்கப்படுவதாக விளக்கம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்களின் காணிக்கையை பெறுவதில் என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது? என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், புராதனமிக்க எந்த கோவிலிலும் அனுமதியின்றி எவரும் கைவைக்க அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலின் நான்கு கோபுரங்களும் அமைந்துள்ள பகுதியிலும், கோவிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களிலும் எந்த அனுமதியுமின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்கு தடை விதிக்கக் கோரி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், பழமையான கோவில்களில் எந்த அனுமதியும் பெறாமல் கட்டுமானங்களை மேற்கொள்ள கூடாது என உயர் நீதிமன்றமே உத்தரவிட்டுள்ள போதும், அதை மீறி ஆறு அடிக்கு மேல் தோண்டப்பட்டுள்ளதாகவும், எந்த மாதிரியான பணிகள் நடக்கின்றன? என்பதே தெரியவில்லை எனவும், கோவிலுக்குள் இருந்த நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத்துறை தரப்பில் சிதம்பரம் கோவிலில் கட்டுமானம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு அக்டோபர் 19-ல் பிறப்பித்த உத்தரவின்படி, நவம்பர் 17ஆம் தேதி குழு அமைத்து அரசாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், குழு ஆய்வு செய்ததா? என கேள்வி எழுப்பியபோது, இதுவரை செய்யவில்லை என்றும், ஆனால் எந்த நேரத்திலும் குழு திடீர் ஆய்வில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பவர்கள் ஏன் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் தொடர்பாக வழக்கு தொடர தயங்குகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
கோவிலின் உட்புறத்திலும், ராஜகோபுரம் அருகே கட்டுமானம் உள்ளதாகவும் அரசு தரப்பில் கூறுவது குறித்து கேள்வி எழுப்பியபோது, பொது தீட்சிதர்கள் குழு தரப்பில் கடைகளோ அன்னதான கூடமோ கட்டவில்லை என்றும், தற்காலிக அமைப்பில் அலுவலகம் தான் செயல்படுகிறது என விளக்கம் அளித்ததுடன், பக்தரை தாக்கியதாக குழுவிலிருந்து நீக்கப்பட்டவர்தான், தங்களுக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்வதாகவும் குறிப்பிட்டார்.
பின்னர் நீதிபதிகள், புராதனமிக்க எந்த கோவிலிலும் அனுமதியின்றி எவரும் கைவைக்க நீதிமன்றம் அனுமதிக்காது என்றும், கோவில்கள் பக்தர்களுக்கானது மட்டுமே என்றும், வேறு நோக்கத்தில் யாரும் கைவைத்தால் அவர்களை இந்த நீதிமன்றம் தடுக்கும் என எச்சரித்ததுடன், ஒவ்வொரு மாதமும் நேரில் சென்று ஆய்வு செய்யவோ? தேவைப்படும்பட்சத்தில் குழு அமைத்து ஆய்வு செய்யவோ? தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு தொடர்புடையவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும், அவற்றை பரிசீலித்த பிறகு தேவைப்படும் பட்சத்தில் குழு அமைத்து ஆய்வு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
சிதம்பரம் கோவிலில் சட்டவிரோத கட்டுமானங்கள் மட்டும் அல்லாமல், உண்டியல் இல்லாததால் சிறிய தொகை முதல் லட்சக்கணக்கான ரூபாய் வரை நன்கொடையாக வசூலிக்கப்படுவதாக பக்தர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அப்போது உண்டியல் இல்லாத நிலையில் கோவிலுக்கு வரும் நன்கொடைகள் எங்கு எவ்வாறு யாரிடம் செலுத்தபடுகிறது, அதற்கு என்ன நடைமுறை கையாளப்படுகிறது என பொது தீட்சதர்கள் குழுவிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பொது தீட்சதர் குழு தரப்பில், நன்கொடை வசூலிக்கும் தொகைக்கு உரிய ரசீது வழங்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாகவும், அறநிலையத்துறை வழக்கு தொடர்பாகவும் ஒரு வாரத்தில் பொது தீட்சிதர்கள் குழு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை டிசம்பர் 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
What's Your Reaction?