ஐஎஸ்ஐஎஸ் தொடர்புக்கு ஆதாரங்கள் இல்லை - அசிஃப் முஸ்தகீனுக்கு ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன்

இந்து மத தலைவர்களை கொலை செய்ய திட்டமிடுவோர் மீது அந்த சட்டத்தை பிரயோகப்படுத்த முடியுமா?

Dec 14, 2023 - 12:45
Dec 14, 2023 - 13:44
ஐஎஸ்ஐஎஸ் தொடர்புக்கு  ஆதாரங்கள் இல்லை -  அசிஃப் முஸ்தகீனுக்கு  ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன்

நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை உள்ளிட்டவைகளுக்கு தீங்கு ஏற்படுத்துவோர் எதிராக பயன்படுத்தப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தில், இந்து மத தலைவர்களை கொலை செய்ய திட்டமிடுவோரை கைது செய்ய விவாதிக்கப்பட வேண்டியது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறி ஈரோட்டை சேர்ந்த அசிஃப் முஸ்தகீன் என்பவர் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் குற்றவாளி என தீர்ப்பு வந்தாலும் கூட, வழக்கு விசாரணையின் போது காலவரம்பின்றி சிறையில் அடைத்து வைத்திருக்க முடியாது எனவும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் கூறி, அசிஃப் முஸ்தகீனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

அதேசமயம், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை , பொருளாதார பாதுகாப்பு உள்ளிட்டவைகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் போதோ அல்லது தீவிரவாத நோக்குடன் மக்களை தாக்கும்போதோ சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் எனவும், ஆனால் இந்து மத தலைவர்களை கொலை செய்ய திட்டமிடுவோர் மீது அந்த சட்டத்தை பிரயோகப்படுத்த முடியுமா? என்ற கேள்வி விவாதத்திற்குரியது என நீதிபதிகள் தீர்ப்பில் அறிவுறுத்தி உள்ளனர்.

இதேபோல, தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள, ஆயுத பயிற்சி வழங்கியதாக பி.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த உமர் ஷெரிப், முகமது சிகம் ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த இந்த அமர்வு, இருவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை எனவும், இதே வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டு பேருக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறி, இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow