நொளம்பூர் கொலை: 7 பேர் கைது, குற்றவாளி ஒருவர் சுட்டு பிடிப்பு
நொளம்பூர் பகுதியில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் சுட்டு பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, சின்ன நொளம்பூர், யூனியன் சாலையில் செல்வி பெ/வ.48, க/பெ. முருகதாஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், நேற்று (26.06.2026) இரவு செல்வியின் மகன்கள் சரத், வ/27 மற்றும் சஞ்சய், வ/24 ஆகியோர் வீட்டினருகே லாரியில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த உதயா என்பவருடன் சஞ்சய் மற்றும் சரத் தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சஞ்சய் மற்றும் சரத் ஆகியோர் உதயாவை கையால் அடித்துவிட்டு வீட்டிற்கு சென்றதாகவும், பின்னர் சிறிது நேரம் கழித்து, உதயா தனது சகோதரர்கள் ராகேஷ், கார்த்திக் மற்றும் சில நண்பர்களை வரவழைத்து, சஞ்சய் மற்றும் சரத் ஆகியோரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சஞ்சய் மற்றும் சரத் ஆகியோரை கத்தியால் தாக்கியுள்ளனர். தடுக்க சென்ற சஞ்சய் மற்றும் சரத்தின் தந்தை முருகதாஸையும் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். காயமடைந்த 3 நபர்களையும் மீட்டு KMC மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதில் சஞ்சய் என்பவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே இறந்துவிட்ட நிலையில், சரத் மற்றும் தந்தை முருகதாஸ் ஆகியோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும், மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், செல்வி என்பவர் கொடுத்த புகார் மீது -நொளம்பூர் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.
மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் உயரதிகாரிகள் ஆலோசனையின்பேரில், நொளம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ரூபேஷ் என்பவரை பிடிக்கும்போது, அவர் காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயற்சித்தபோது, காவல் குழுவினர் தற்காப்புக்காக 1.ரூபேஷ், வ/23, பெருமாள்கோயில் தெரு, மதுரவாயல், சென்னை என்பவரின் கால் முட்டியில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய எதிரிகள் 2.நவீன்குமார், வ/24, பெத்தேல் நகர், ஈஞ்சம்பாக்கம், 3.உதயராஜ், வ/21, பெருமாள் கோயில் தெரு, மதுரவாயல், 4.சூர்யா, வ/20, எம்.எம்.டி.ஏ. காலனி, மதுரவாயல், 5.கார்த்திக் ராஜா, வ/28, பெருமாள் கோயில் தெரு, 6.ராகேஷ் ராஜா, வ/26, பெருமாள் கோயில் தெரு, மதுரவாயல், 7.மேஷாக், வ/22, பெருமாள் கோயில் தெரு, மதுரவாயல், 8.சூர்யபிரகாஷ், வ/27,. பெருமாள் கோயில் தெரு, மதுரவாயல் என மொத்தம் 8 நபர்களை கைது செய்தனர்.
இது தொடர்பாக நொளம்பூர் காவல் நிலைய காவல் குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரத்தில் எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
What's Your Reaction?