Sayaji Shinde: திடீர் நெஞ்சுவலி… மருத்துவமனையில் அட்மிட்டான சாயாஜி ஷிண்டே… லேட்டஸ்ட் ஹெல்த் அப்டேட்
பாரதி திரைப்படம் மூலம் தமிழில் பிரபலமான சாயாஜி ஷிண்டே நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: இந்தி, மராத்தி மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் சாயாஜி ஷிண்டே. தமிழில் பாரதியின் பயோபிக் படத்தில் முண்டாசுக் கட்டி நடித்து ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார். அந்தளவிற்கு பாரதியை அப்படியே அச்சு அசலாக திரையில் கொண்டு வந்தார் சாயாஜி ஷிண்டே. இதனால் தமிழில் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. அஜித்தின் பூவெல்லாம் உன் வாசம், ரஜினியுடன் பாபா, விக்ரமின் தூள், விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் என கோலிவுட்டில் பிஸியான நடிகராக வலம் வந்தார்.
தொடர்ச்சியாக பல படங்களில் வில்லன், குணச்சித்திரம் உட்பட பல கேரக்டர்களில் நடித்த சாயாஜி ஷிண்டே, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்துள்ளார் சாயாஜி ஷிண்டே. ஆனால் நேற்று காலை நெஞ்சு வலியால் அவர் அவதிப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து சாயாஜி ஷிண்டேயின் குடும்பத்தினர் அவரை மஹாராஷ்டிராவில் உள்ள சதாரா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். உடனடியாக சாயாஜியை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு அடைப்புகள் இருப்பதை உறுதி செய்ததோடு, அதற்கான சிகிச்சையும் வழங்கி வருகின்றனர். அதேநேரம் சாயாஜி ஷிண்டேவின் உடல்நிலை நார்மலாக இருப்பதாகவும், பயப்பட வேண்டிய அளவில் இல்லையென்றும் அப்டேட் கொடுத்துள்ளனர். மேலும் ஓரிரு நாட்களில் சாயாஜி ஷிண்டே வீடு திரும்புவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?