ஜம்முகாஷ்மீர் 370 அந்தஸ்து ரத்து மீட்பா? எதிர்கட்சிகளுக்கு சவால் விட்ட பிரதமர் மோடி!
ஜம்முகாஷ்மீரின் 370 சிறப்புப்பிரிவு ரத்தை திரும்பப் பெற நினைத்தால் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஐம்மு-காஷ்மீரின் உதம்பூரில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, ஜம்முகாஷ்மீர் 370 சட்டப்பிரிவை நீக்கினால் நாடு பிரிந்து விடும் என எதிர்கட்சிகள் ஒரு மாயையை உருவாக்கியுள்ளதாக அவர் விமர்சித்தார். அதிகாரத்துக்காகவே 370 சட்டப்பிரிவு சுவர் எழுப்பப்பட்டதாகவும், அதனை அகற்றி, மண்ணில் ஆழமாக பாஜக புதைத்து விட்டதாகவும் அவர் கூறினார்.
ஒரு கட்டத்தில், முடிந்தால் சட்டப்பிரிவு நீக்கத்தை திரும்பப் பெற முடியுமா என எதிர்கட்சிகளுக்கு சவால் விட்ட பிரதமர் நரேந்திர மோடி, அப்படி செய்தால், மக்கள் அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் தெரிவித்தார். ஜம்முகாஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் காலம் வெகுதொலைவில் இல்லை எனவும் மாநிலத்தின் தற்போதைய பணிகள் வெறும் டிரெய்லர் தான் - இனி அற்புதத்தை நிகழ்த்துவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் சார்ந்த அனைவரது பிரச்னையும் தீர்க்க முடியும் எனவும் அவர் கூறினார். ஜம்முகாஷ்மீர் மக்கள் மனமாற்றத்தில் உள்ளதாகவும் ஏமாற்றத்தில் இருந்து நம்பிக்கையை நோக்கி மக்கள் நகரத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
What's Your Reaction?