ஒடிசாவில் தனித்துப்போட்டி!! பாஜக திட்டவட்டம்...
ஒடிசாவில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக தனித்தே களம் கண்டு ஆட்சியைக் கைப்பற்றும் என அக்கட்சியின் மாநில தலைவர் மன்மோகன் சமால் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுடன் இணைத்து ஒடிசா சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஒடிசாவின் ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தளமும், பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் எனத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதற்கான பேச்சு வார்த்தைகளும் நடத்தப்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு பிஜூ ஜனதா தளத்தின் முக்கிய தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாகக் கூட்டணிப் பேச்சுவார்த்தையை அக்கட்சி கைவிட்டது. மேலும், பிஜூ ஜனதா தள கட்சியின் துணைத்தலைவர் தேபி பிரசாத் மிஸ்ரா மற்றும் அருண் குமார் மிஸ்ரா ஆகியோர் ஒடிசா மக்களின் நலனுக்குத் தேவையான முடிவுகளைக் கட்சி எடுக்கும் என்றனர்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த ஒடிசா மாநில பாஜக தலைவர் மன்மோகன், வரும் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என்றும், தனித்தே களம் கண்டு ஒடிசாவில் ஆட்சியமைக்கும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். அதேபோல், மக்களவைத் தேர்தலிலும் பாஜக 400 தொகுதிகளைக் கைப்பற்றும் எனக் கூறினார்.
2008ஆம் ஆண்டு கந்தமால் மாவட்டத்தில் நடைபெற்ற கலவரத்தைத் தொடர்ந்து, பாஜகவுடனான கூட்டணியை பிஜூ ஜனதா தளம் முறித்துக்கொண்ட நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
What's Your Reaction?