வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி வாங்கிய வாஷிங் மெஷின்... "2 மாதங்களில் பழுது" - கை விரித்த பிரபல ஷோ ரூம்...

May 15, 2024 - 20:56
வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி வாங்கிய வாஷிங் மெஷின்...  "2 மாதங்களில் பழுது" - கை விரித்த பிரபல ஷோ ரூம்...

மாதாமாதம் காசு சேர்த்து வாங்கிய வாஷிங் மெஷின் அடிக்கடி பழுதானதால் கடுப்பான வாடிக்கையாளர் ஒருவர், வாங்கிய கடையின் வாசலிலேயே வாஷிங் மெஷினை மண்ணென்னெய் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சென்னை திருவல்லிக்கேணி சத்தியவாணிமுத்து நகரைச் சேர்ந்தவர் லாவண்யா. தனியாக வசித்து வரும் இவர், சிறுக சிறுக பணம் சேர்த்து, ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோ ரூமிலிருந்து வாஷிங் மெஷின் ஒன்றை வாங்கியிருக்கிறார். ஆனால், வாங்கியதிலிருந்து அந்த வாஷிங் மெஷின் துணிகளை துவைத்ததை விட, இவரை மன உளைச்சல் ஆக்கியதே அதிகம். அடிக்கடி பழுதாகி பழுதாகி ஓடாமல் நின்றிருக்கிறது வாஷிங் மெஷின். சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட சர்வீஸ் செய்தும் வாஷிங் மெஷின் முழுதாக சரியாகவில்லை என்று தெரியவருகிறது. 

இதனால் வாஷிங் மெஷினை நேராக ஷோருமுக்கே எடுத்து வந்த லாவண்யா, இதை மாற்றிக் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு கடைக்காரர்கள், மீண்டும் சர்வீஸ் வேண்டுமானால் செய்து கொடுக்கிறோம். மாற்றியெல்லாம் தர முடியாது என்று மறுத்துள்ளனர். ஆனால், அங்கிருந்து போகாமல் வாக்குவாதம் செய்திருக்கிறார் லாவண்யா. ஒரு கட்டத்தில் மிகவும் காண்டாகி, கடை வாசலில் வைத்தே வாஷிங் மிஷின் மீது தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி எரிக்க முயன்றார் லாவண்யா. 

இதை கவனித்த ஷோ ரூம் மேலாளர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த திருவல்லிக்கேணி காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். மேலும், வாஷிங்மிஷினை மாற்றித் தர ஷோ ரூம் மேலாளரிடம் அவர்களும் கேட்டுள்ளனர். அதற்கும் அவர் மறுப்பு தெரிவிக்க, வாஷிங்மிஷினை கடை வாசலிலேயே போட்டுவிட்டு, லாவண்யா புறப்பட்டுச் சென்றார். 10 ஆண்டுகள் வாரண்டி இருப்பதாக கூறப்படும் வாஷிங்மிஷின் பழுதாகி நின்றதை பார்த்தபோதெல்லாம் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவித்த லாவண்யா, வாஷிங் மெஷின் செலவை  மருத்துவ செலவுக்கு போனதாக நினைத்துக் கொள்வதாக வேதனை தெரிவித்தார். 

கிடைத்த குறைந்த வருமானத்தில் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி சிறுக சிறுக பணத்தை சேமித்து வீட்டு உபயோக பொருள் வாங்கிய நிலையில், அதனால் எந்த பயனும் கிடைக்காமல் பணம்தான் வீணானதாக வேதனைப்படும் லாவண்யா, நுகர்வோர் நீதிமன்றத்திற்கு சென்றால் நியாயம் கிடைக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow