தஞ்சையில் பயணிகள் விமான சேவை அடுத்த மாதம் தொடக்கம்
அதேபோன்று ராமநாதபுரம், வேலூர், நெய்வேலி ஆகிய நகரங்களுக்கும் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தஞ்சாவூர் விமானப்படைத்தளத்தில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு பயணிகள் விமான சேவை அடுத்த மாதம் தொடங்கப்படுகிறது.
டெல்டா மாவட்டங்களிலே முதன்மை நகரமாக தஞ்சாவூர் திகழ்ந்து வருகிறது.திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பணி, படிப்பு என பல்வேறு காரணங்களுக்காக தஞ்சைக்கு வந்து செல்கிறார்கள்.அதேபோல் திருச்சி விமான நிலையத்துக்கு தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சேர்ந்த பயணிகளே அதிகளவில் சென்று வருகிறார்கள்.இந்த நிலையில் தஞ்சாவூரில் இருந்து உள்நாட்டு விமானங்களை இயக்க வேண்டும் என்பது பல ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வருகிறது.
தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் இந்த விமானப்படைத்தளம் அமைந்து உள்ளது.கடந்த 1990ஆம் ஆண்டு இங்கிருந்து சென்னைக்கு வாயுதூத் விமான சேவை இயக்கப்பட்டு வந்தது. ஆனால், பயணிகள் எண்ணிக்கை அதிகம் இல்லாததால் விமான சேவை நிறுத்தப்பட்டது. 2006 ஆம் ஆண்டு இதை விமானப் படை கையகப்படுத்தி 2012 முதல் முதன்மை விமானப்படை நிலையமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அருகில் உள்ள திருச்சியில் பன்னாட்டு விமான நிலையம் இருந்தாலும், டெல்டா மாவட்ட மக்களின் வசதிக்காக தஞ்சாவூரில் இருந்து பயணிகள் விமான சேவையை தொடங்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வந்தன. இந்த நிலையில்தான் சிறிய நகரங்களை விமான சேவை மூலம் இணைக்கும் உதான் திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமான சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டது.இதற்கான கட்டமைப்பு பணிகள் நடந்து முடிந்து உள்ளன.
இதனைதொடர்ந்து வரும் டிசம்பர் மாதம் தஞ்சாவூர் விமான நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய பெரு நகரங்களுக்கு பயணிகள் விமான சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 20 இருக்கைகளை கொண்ட சிறிய விமானங்கள் தஞ்சையில் இருந்து இயக்கப்பட இருக்கின்றன. இது தொடர்பாக ஏர்டாக்சி நிறுவனம் எந்தெந்த நகரங்களில் விமான சேவை தொடங்கப்படும் என்ற விபரத்தை வெளியிட்டு உள்ளது.
அதில் தஞ்சாவூரில் இருந்து பெங்களூர், தஞ்சாவூரில் இருந்து சென்னை, பெங்களூரில் இருந்து தஞ்சாவூர், சென்னையில் இருந்து தஞ்சாவூர் ஆகிய நகரங்களுக்கு விமான சேவை இயக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது. அதேபோன்று ராமநாதபுரம், வேலூர், நெய்வேலி ஆகிய நகரங்களுக்கும் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
What's Your Reaction?