கள்ளச்சாராய விவகாரம்: ஜெட் வேகத்தில் சிபிசிஐடி... அடுத்தடுத்து கைதாகும் முக்கிய குற்றவாளிகள்!

கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதியை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இவரது தலைமையிலான சிபிசிஐடி தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

Jun 23, 2024 - 13:05
கள்ளச்சாராய விவகாரம்: ஜெட் வேகத்தில் சிபிசிஐடி... அடுத்தடுத்து கைதாகும் முக்கிய குற்றவாளிகள்!
முக்கிய குற்றவாளி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் ஜெட் வேகத்தில் விசாரணை நடத்தி வரும் போலீசார், அடுத்தடுத்து முக்கிய குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். 

கள்ளக்குறிச்சி நகர்ப்பகுதியைச் சேர்ந்த கருணாபுரம் பகுதியில் கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டி என்பவர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த பலர் இந்த கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர்.

இதை குடித்த பலர் கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டனர். மேலும் சிலர் மயங்கி விழுந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் பலர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 57 இதுவரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளதாக கூறப்படும் நிலையில், கள்ளச்சாராயத்துக்கு 57 பேர் உயிரிழந்தது தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதியை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இவரது தலைமையிலான சிபிசிஐடி  தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய குற்றவாளியான கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், விஜயா, தாமோதரன், ஜோசப் ராஜா, முத்து, சின்னத்துரை, மாதேஷ் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் கள்ளச்சாராயத்தில் பயன்படுத்தப்பட்ட மெத்தனால் ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பது தெரியவந்தது. மேலும் மெத்தனாலில் வெறும் தண்ணீரை கலந்து விற்ற அதிர்ச்சி தகவலும் விசாரணையில் அம்பலமானது. 

கைது செய்யப்பட்ட மாதேஷ் ஆன்லைன் முலம் தொழிற்சாலைகளை கண்டுபிடித்து ஜி.எஸ்.டி. பில் இல்லாமல் தின்னர் என்ற பெயரில் மெத்தனாலை வாங்கியுள்ளார். அவரிடம் இருந்து மெத்தனாலை வாங்கிய சின்னதுரை, அதில் 1 லிட்டர் தண்ணீரை கலந்து விற்றுள்ளார். 

பின்பு கோவிந்தராஜ், சின்னதுரையிடம் இருந்து மெத்தனாலை வாங்கி அதில் மேலும் 1 லிட்டர் தண்ணீரை கலந்து விற்பனை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மாதேஷ் நண்பர்களான ஹோட்டல் உரிமையாளர் சக்திவேல் மற்றும் மீன்பிடி வியாபாரி கண்ணன் மற்றும் சிவா என்ற சிவக்குமார் ஆகிய 3 பேரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

இதில் சக்திவேல், சிவக்குமார் ஆகியோர் மெத்தனால் கடத்த மாதேஷுக்கு உதவி புரிந்துள்ளனர்.  சிவக்குமார் மெத்தனாலை மொத்தமாக விற்பனை செய்பவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அடுத்தடுத்து முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படுவதால் கள்ளச்சாராய விவகாரம் சூடுபிடித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow