என்னங்க பண்றீங்க? மாட்டுச் சாணத்தை வகுப்பறையின் சுவரில் பூசிய கல்லூரி முதல்வரால் பரபரப்பு

தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள லட்சுமிபாய் கல்லூரியில் வகுப்பறையின் சுவரினை மாட்டுச்சாணத்தால் மேல்பூச்சு செய்யும் கல்லூரி முதல்வர் என வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவிய நிலையில், அதற்கு கல்லூரி முதல்வர் விளக்கமளித்துள்ளார்.

Apr 14, 2025 - 15:20
என்னங்க பண்றீங்க? மாட்டுச் சாணத்தை வகுப்பறையின் சுவரில் பூசிய கல்லூரி முதல்வரால் பரபரப்பு
laxmibai college principal was eating cow dung on classroom walls made controversy

பகுத்தறிவு போதிக்க வேண்டிய கல்வி நிலையங்கள் சமீப காலமாக அவற்றின் செயல்பாடுகளால் தொடர் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இன்ஸ்டா பிரபலங்களை பள்ளி, கல்லூரி நிகழ்வுக்கு அழைத்து வந்து அறிவுக்கு ஓவ்வாத சில விஷயங்களை அவர்கள் பேசுவதும், அதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் எழுவதும் என்பது தொடர் கதையாகி வந்த நிலையில் தற்போது டெல்லி கல்லூரி முதல்வரின் செயல்பாடு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

1965 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட லட்சுமிபாய் கல்லூரியானது, டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியின் முதல்வர் பிரத்யுஷ் வத்சலா, ஒரு மேஜையில் ஏறி வகுப்பறையின் சுற்றுச்சுவர்களில் மாட்டுச்சாணத்தால் மேல்பூச்சு செய்த காணொளி இணையத்தில் வைரலாகியது.

ஒரு கல்லூரியின் முதல்வரே இப்படியிருந்தால், அங்கு பயிலும் மாணவர்களின் நிலை என்னவாக இருக்கும்? என பலர் கடுமையாக கல்லூரி முதல்வரின் செயல்பாட்டினை விமர்சித்து வந்தனர். இதற்கு கல்லூரி முதல்வர், “நான் செய்தது ஆராய்ச்சி திட்டத்தின் ஒரு பகுதி” என விளக்கமளித்துள்ளார்.

PTI-யிடம் லட்சுமிபாய் முதல்வர் பிரத்யுஷ் வத்சலா கூறுகையில், ”வகுப்பறையின் சுவர்களில் மாட்டுச்சாணம் பூசியது, ஒரு ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ”பாரம்பரிய இந்திய அறிவைப் பயன்படுத்தி வெப்ப அழுத்தத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வு” (Study of Heat Stress Control by Using Traditional Indian Knowledge)
என்கிற தலைப்பில் இந்த திட்டம் தற்போது சோதனை முயற்சியில் உள்ளது. ஒரு வாரத்திற்குப் பிறகு முழு ஆராய்ச்சியின் விவரங்களையும் என்னால் பகிர்ந்து கொள்ள முடியும். இயற்கையான சாணத்தை தொடுவதில் எந்தத் தீங்கும் இல்லை என்பதால் அதனை நானே என் கைகளால் பூசினேன். சிலர் முழு விவரங்களும் தெரியாமல் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள்" என்று பிரத்யுஷ் வத்சலா குறிப்பிட்டுள்ளார்.

கல்லூரி முதல்வர் சுவர் முழுவதும் மாட்டுச்சாணத்தை பூசும் வீடியோவானது முதலில், கல்லூரி ஆசிரியர்கள் உள்ளடங்கிய வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்டுள்ளது. அதை யாரோ இணையத்தில் பதிவேற்ற காட்டுத்தீ போல் பரவி விவாதங்களை கிளப்பியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow