"பொன்முடி, எ.வ.வேலு பேசும்போதெல்லாம் எங்க இருந்தீங்க...?" 'பிச்சை' சர்ச்சை குறித்து குஷ்பு பதில்...
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை பிச்சை எனக்கூறியது தொடர்பாக நடிகையும் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு விளக்கமளித்துள்ளார்.
சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டில் முன்னதாக குஷ்பு கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், தாய்மார்களுக்கு ரூ.1000 பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களிப்பார்களா எனக்கூறியது சர்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தனது X தளத்தில் விளக்கமளித்துள்ள குஷ்பு, 1982ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் ஏழைகளுக்கான இலவச உணவுத் திட்டத்தை முரசொலி மாறன் பிச்சை எனக் கூறியதாக தெரிவித்துள்ளார். மகளிர் இலவச பேருந்துப் பயணத்தை பொன்முடி ஓசி எனக் கூறியதாகவும், மதுரை உயர்நீதிமன்ற கிளை, டாக்டர் கலைஞர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பிச்சையாக வீசியது என எ.வ.வேலு சொன்னதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அப்போதெல்லாம் யாரும் அவர்களை கண்டிக்கவில்லை எனவும் குஷ்பு தெரிவித்துள்ளார். டாஸ்மாக்கில் இருந்து கமிஷன் அடிப்பதை நிறுத்தி தாய்மார்களுக்கு திமுக உதவ வேண்டும் எனவும் குடிகாரர்களால் மனைவிகள் அடையும் அவதி பணத்தை விடப் பெரியது எனவும் அவர் கூறியுள்ளார். பெண்களுக்கு உரிய சுதந்திரம் வழங்கப்பட்டால், உங்களுடைய ரூ.1000 தேவைப்படாது எனவும் குடும்பத்தை கண்ணியத்துடன் நடத்த அவர்களின் சேமிப்பே போதுமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இன்னும் 14 தலைமுறைகளை காக்க பணத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு திமுக செயல்படும் எனவும் குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?