பாதிக்கும் வாக்கு வங்கி.. விஜய்க்கு எதிராக சீமான்- திமுக அசைன்மென்ட்?
'நீங்கள் எந்தக் கூட்டணிக்கும் போகக் கூடாது. தனித்துதான் நிற்கவேண்டும்' என ஸ்டாலின் கூறியுள்ளாராம். அதன் வெளிப்பாடாகத்தான் சீமானை இ.பி.எஸ். கூட்டணிக்கு அழைத்த போதும், 'தனித்துதான் போட்டி' என வெளிப்படையாகவே சீமான் அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தல் களம் முன்பு எப்போதும் இல்லாத வகையில் சூடுபிடிக்கப் போகிறது. ஸ்டாலின் ஒருபக்கம், எடப்பாடி ஒரு பக்கம், விஜய்யின் த.வெ.க. ஒரு பக்கம், சீமான் ஒருபக்கம் என தனித்துப் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் நான்கு முனைப் போட்டிக்குத் தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தயாராகி வருகிறது. இதில், விஜய்யைப் பலவீனப்படுத்த, சீமானுக்கு தி.மு.க. அசைன்மென்ட் கொடுத்திருப்பதுதான் ட்விஸ்ட்!
தொடர்ந்து தனித்துப் போட்டியிடும் 'நாம் தமிழர்' கட்சி 2021 சட்டமன்றத் தேர்தலில் 6.6 சதவிகித வாக்குகளைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 8.22 சதவிகித வாக்குகளைப் பெற்றது. இப்படி தேர்தலுக்குத் தேர்தல் வாக்கு சதவிகிதத்தை சீமான் உயர்த்திக் கொண்டே வருகிறார். அதற்கெல்லாம் வேட்டு வைக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை அமைந்துவிட்டது.
விஜய் புதிய கட்சி அறிவிப்பு வெளியிட்டது முதல், 'தம்பி... தம்பி...' என விஜய்யை சீமான் பொதுவெளியில் அழைத்து வந்தார். இந்த நிலையில் பெரியார் மீதான சீமானின் விமர்சனம், விஜய்க்குக் கோபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, சீமானின் கூட்டணி அழைப்பையும் விஜய் நிராகரித்ததைத் தொடர்ந்து சீமானுக்கு விஜய் மீது கோபம் கொப்பளிக்கத் தொடங்கியது.
இதனால் மேடைக்கு மேடை விஜய்யையும், த.வெ.க.வையும் சீமான் கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கினார். அதே சமயம் சீமானையும், 'நாம் தமிழர்' கட்சியையும் யாரும் விமர்சனம் செய்யக்கூடாது என விஜய் தடை போட்டார். தொடர்ந்து விமர்சித்து வந்த சீமானும், நாளடைவில் விஜய் மீதான விமர்சனத்தைத் தவிர்த்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, மு.க.முத்து மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதற்காக முதல்வர் ஸ்டாலினை சீமான் சந்தித்தார். கருணாநிதி மறைவிற்குகூட ஸ்டாலினை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவிக்கவில்லை, சீமான்.
அதனால், தற்போதைய சந்திப்பு பல்வேறு சந்தேகங்களை அரசியல் வட்டாரத்தில் எழுப்பியதுடன் சில கூட்டல் கழித்தல் கணக்குக்கு வழிவகுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
விஜய்யின் வருகையால், சீமான் பெற்று வரும் இளைஞர்களின் வாக்கு வங்கிக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தனது 8 சதவிகித வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்கிற அச்சம் சீமானிடம் ஏற்பட்டுள்ளது. மறுபுறம் 'நாம் தமிழர்' கட்சியில் உட்கட்சி குழப்பங்களும் கும்மியடிக்கிறது. இந்த நிலையில் விஜய்யை எதிர்க்க ஆளும் தி.மு.கவின் உதவி சீமானுக்குத் தேவைப்படுகிறது. அதேபோல, விஜயலட்சுமி பாலியல் புகாரால் தேர்தல் நேரத்தில் தனக்குப் பெரும் சிக்கல் வந்துவிடுமோ என கலக்கத்தில் இருக்கிறாராம், சீமான்.
அதனாலேயே, மு.க.முத்து இறப்புக்கு ஆறுதல் சொல்வது போல முதல்வரை சந்தித்து இந்த விவகாரத்தில் தனக்கு உதவுமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். அப்படியானால், 'நீங்கள் எந்தக் கூட்டணிக்கும் போகக் கூடாது. தனித்துதான் நிற்கவேண்டும்' என்ற கோரிக்கையோடு ஸ்டாலின் ஓகே சொல்லியிருக்கிறாராம். அதன் வெளிப்பாடாகத்தான் சீமானை இ.பி.எஸ். கூட்டணிக்கு அழைத்த போதும், 'தனித்துதான் போட்டி' என வெளிப்படையாகவே சீமான் சொன்னார்.
இது மட்டுமின்றி, விஜய்யையும், தவெகவையும் கடுமையாக அட்டாக் செய்ய வேண்டும் என தி.மு.க. தரப்பில் இருந்து சீமானுக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. இதற்குப் பரிகாரமாக வரும் சட்டமன்றத் தேர்தலில் 'நாம் தமிழர்' கட்சிக்குப் பெரும் உதவிகளைச் செய்வதாக அறிவாலயம் தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். விஜய்யை சீமான் இன்னும் இன்னும் வறுத்தெடுக்க வாய்ப்பிருக்கு ராஜா!
(கட்டுரையாளர்: பாபு / குமுதம் / 13.08.2025)
What's Your Reaction?






