“ஒன்றிய அரசை எதிர்க்கும் விஷயத்தில் கேரள அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க தயார்” - முதலமைச்சர் கடிதம்

Feb 6, 2024 - 15:43
“ஒன்றிய அரசை எதிர்க்கும் விஷயத்தில் கேரள அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க தயார்” - முதலமைச்சர்  கடிதம்

“மாநில அரசுகளின் நிதி நிருவாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பினை அளிக்கும்” என  கேரள முதலமைச்சருக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில்:-

மாநில அரசின் நிதி நிர்வாகத்தில்  தன்னிச்சையாகவும் பாரபட்சமாகவும் செயல்படும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாகத் குறிப்பிட்டதோடு, இந்த விஷயத்தில் தமிழ்நாடு தனது முழு ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மாநில அரசுகளுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளில்  ஒன்றிய அரசு சில காலங்களாகவே செயல்பட்டு வருவதாகவும், மாநிலங்களின் நிதி நிர்வாகத்தில் இதுபோன்ற மறைமுகக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும் என்பதில் ,முற்போக்கான மாநிலங்களிடையே தெளிவான ஒருமித்த கருத்து உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதோடு, மாநிலங்களின்  பொதுச் செலவுகளுக்கு நிதியளிப்பதற்கான பொதுக்கடன் என்பது , மாநில சட்டமன்றத்தில் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும்,.. இருப்பினும் மாநில அரசுகள் கடன் வாங்குவதற்கான வாய்ப்பினை கட்டுப்படுத்துவதற்காக  ஒன்றிய அரசு அரசமைப்பு சட்டம் 293-ன்  படி தனக்குள்ள அதிகாரத்தைத் தவறாகப்  பயன்படுத்தி வருகிறது என்றும்  குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு செய்வதன் மூலம் மாநில அரசுகளின் நிதி நிர்வாகம் தொடர்பான முனைப்புகளைத் தடுக்கும் நோக்கில்  செயல்பட்டு வருவதாகவும், இதனால் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் நோக்கமான நிதிக்கூட்டாட்சியின் அடிப்படைக்கே அச்சுறுத்தலாக அமைவதாகவும் சாடினார். 

மாநில அரசின் நிகரக்கடன் உச்சவரம்பினை கணக்கிடுவதற்கான மொத்த உற்பத்தி வளர்ச்சியை வெறும் 8 விழுக்காடு என நிர்ணயித்ததனால் நடப்பாண்டில் 6000 கோடி மாநில அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

அதோடு,  ஒன்றிய அரசின் திட்டமான மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் வேண்டுமென்றே காலதாமதம் காட்டியதால் இத்திட்டத்திற்கான மொத்த கடன் தொகையான 33,594 கோடி ரூபாயின் கடன் சுமை மாநில அரசின் மீதே விழுந்துள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே ஜி.எஸ்.டி முறையை அமல்படுத்தியதன் மூலம் மாநிலங்களின்  நிதித் தன்னாட்சி கடுமையாக குறைக்கப்பட்டுள்ள நேரத்தில், இத்தகைய பாரபட்சமான மற்றும் அரசியலமைப்புக்கு முரணான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு முன்னெடுத்து வருகிறது எனக் குறிப்பிட்டவர், ஒருமித்த கருத்துடைய முற்போக்கான மாநில அரசுகள் இதனை எதிர்க்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், நிதிக்கூட்டாட்சித் தத்துவத்தினை பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிப்பாட்டை தான்  முழுமையாக ஆதரிப்பதாகவும் இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயார் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க  | அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மீண்டும் தள்ளுபடி!!!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow