மத அரசியலுக்காக மக்களை பயன்படுத்துவது யார்? கனிமொழி கேள்வி

ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல் என்பதுபோல, ஒரே கடவுள் என்று கொண்டு வருவது மக்களின் உரிமையை பறிப்பது ஆகும்

Jan 25, 2024 - 09:29
Jan 25, 2024 - 11:46
மத அரசியலுக்காக மக்களை பயன்படுத்துவது யார்? கனிமொழி கேள்வி

பெரும்பான்மை இந்துக்களின் குழந்தைகள் படிக்க வேண்டும்.வாழ்க்கை உயர வேண்டும் என்பதற்காக சின்ன சின்ன ஊர்களில் எல்லாம் அரசு கல்லூரிகளை கலைஞர் உருவாக்கினார் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, பட்டா வழங்கும் விழா நாகர்கோவிலில் நேற்று மாலை  நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியம் வரவேற்றார். அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், விஜய்வசந்த் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

விழாவில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார். அந்த வகையில் மொத்தம் 4142 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. பின்னர் அவர் பேசியபோது கூறியதாவது:-

“கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி எத்தனையோ நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.ஆனால் பட்டா வழங்கும் இந்த நிகழ்ச்சி மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளிக்கிறது. அடிப்படை தேவையான உணவு, உடைக்கு அடுத்தபடியாக இருப்பது பாதுகாப்பான இடம். அந்த இடம் நமக்கு சொந்தமான இடமாக இருந்தால் அதைவிட மனநிறைவான ஒன்று யாருக்கும் இருக்காது. இந்த நிகழ்ச்சி மூலம்  4 ஆயிரத்து 142 பேருக்கு பட்டா வழங்கப்பட்டாலும், இன்னும் 3 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் 7 ஆயிரம் பேருக்கு படடா வழங்கப்படுகிறது. இந்தியாவில் முதல் முறையாக குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கியது கலைஞர்தான். சமத்துவபுரத்தை உருவாக்கினார்.பசுமை வீடு திட்டத்தை கொண்டு வந்தார்.இப்படி பல்வேறு திட்டங்களை கலைஞர் கொண்டு வந்துள்ளார். 

தி.மு.க. இந்துக்களுக்கு எதிரான இயக்கம் என்ற பொய் பிரசாரத்தை நம்பாதீர்கள் என்று அமைச்சர் கூறினார்.இந்த நிகழச்சிக்கு வந்திருப்பவர்களில் எத்தனை இந்துக்கள் உள்ளனர்? பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள்தான். பட்டாக்கள் வழங்குவது இந்துக்களுக்கு எதிரான கட்சியா? இந்துக்களுக்கான கட்சி என்று கூறிக்கொண்டு அடித்தட்டு இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து பணியாற்றுவது யார் என்று முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
 
சமஸ்கிருதம் படிக்காதவர்கள் மருத்துவம் படிக்க முடியாது என்ற சூழல் இருந்தது.அதை மாற்றியது நீதிக்கட்சி. அதன் தொடர்ச்சியாக வந்த தி.மு.க. ஆட்சியில் கலைஞர் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக்கல்லூரி திட்டத்தை தொடங்கினார். தற்போது இந்தியாவில் அதிக மருத்துக்கல்லூரி உள்ள மாநிலம் தமிழ்நாடு.

இந்த நிலையில் தான் சாதாரண வீட்டு குழந்தைகள் படிக்க கூடாது என்பதற்காக நீட் என்ற தேர்வை கொண்டு வந்துள்ளனர். இவர்கள் பெரும்பான்மை இந்துக்களுக்கு பாதுகாப்பா? ல்லது தி.மு.க. பாதுகாப்பா?என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பெரும்பான்மை இந்துக்களின் குழந்தைகள் படிக்க வேண்டும். வாழ்க்கைக உயர வேண்டும். இதற்காக தான் சின்ன, சின்ன ஊர்களில் எல்லாம் அரசு கல்லூரிகளை கலைஞர் உருவாக்கினார். 

தற்போது மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை கொண்டு வந்துள்ளது. ஒரு மாணவர் படித்தாலும் அந்த பள்ளியை இயக்குவது தான் தமிழகம்.ஆனால் புதிய கல்வி கொள்ளை என்னவென்றால் மாணவர்கள் குறைவாக இருந்தால் அதை மூடிவிட்டு வேறு இடத்தில் படிக்க கூறுகிறது. மதத்துக்காக, அரசியலுக்காக மக்களை பயன்படுத்துவது யார்? மக்களை உயர்த்துவதற்காக, வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான ஆட்சி எது என்பதை புரிந்துகொண்டு இருப்பீர்கள். ஒரே மதம் என்றாலும் மத பழக்க வழக்கங்கள் வேறுவிதமாக இருக்கும். 

ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல் என்பது போல ஒரே கடவுள் என்று கொண்டு வருவது மக்களின் உரிமையை பறிப்பது ஆகும். எல்லோருக்கும் உரிமை உள்ளது. அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow