பாலியல் வீடியோ சர்ச்சை.. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்... மஜத கட்சித் தலைமை அதிரடி நடவடிக்கை!
ஏற்கனவே இக்கட்சியின் சார்பில் பிரஜ்வால், ஹாசன் தொகுதியில் போட்டியிடும் நிலையில், இந்த நடவடிக்கையால் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா மீது பாலியல் புகார் சுமத்தப்பட்ட நிலையில், அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் பிரதமரான ஹெ.டி. தேவகவுடா, தற்போது மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவராக உள்ளார். இவரது பேரனும், கர்நாடகாவின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஹெ.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வால் ரேவண்ணா, கர்நாடக மாநிலம் ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி ஆக உள்ளார். மேலும், தற்பொது நடந்து வரும் மக்களவைத் தேர்தலிலும் அதே தொகுதியில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். இதற்கிடையில், கடந்த ஏப்ரல் 26-ம் தேதி வாக்களித்ததும் பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மணிக்கு பறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
பிரஜ்வால் ரேவண்ணா மீது பாலியல் புகார் :
இந்நிலையில், அவர் மீது கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அதில் தன்னை மிரட்டி பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ள அந்தப்பெண், தன் மகளிடத்திலும் பிரஜ்வால் பலமுறை வீடியோ காலில் தகாத முறையில் பேசி, அச்சுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், பல பென்டிரைவ்களில் பதிவு செய்யப்பட்டிருந்த சுமார் 3000-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியாகின. மேலும், பிரஜ்வால் மட்டுமின்றி அவரது தந்தை ஹெ.டி ரேவண்ணாவும் பலமுறை பாலியல் தொல்லை அளித்ததாக புகார் தெரிவித்தார்.
பாலியல் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை :
கர்நாடகா அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா தெரிவித்தார். அதன் அடிப்படையில், சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை தாமாக முன்வந்து எடுத்துள்ள தேசிய மகளிர் ஆணையம், பிரஜ்வாலை உடனே கைது செய்ய வேண்டும் என்றும், இவ்வழக்கு குறித்து 3 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கர்நாடக மாநில போலீசுக்கு உத்தரவிட்டு கடிதம் எழுதியுள்ளது.
பிரஜ்வால் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அவரது பெரியப்பாவும், கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி தெரிவித்திருந்தார். மேலும், அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாஜக கை விரித்தது. இது தொடர்பாக கருத்து கூறியுள்ள அமித்ஷா பெண்கள் மீதான வன்முறைக்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
கட்சியிலிருந்து பிரஜ்வால் இடைநீக்கம் :
இதற்கு மத்தியில் ஜனதா தளம் கட்சியிலிருந்து பிரஜ்வால் ரேவண்ணாவை இடைநீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் தேவகவுடா அறிவித்துள்ளார். இதுகுறித்த அவரது குறிப்பில், பிரஜ்வால் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததன் அடிப்படையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இக்கட்சியின் சார்பில் பிரஜ்வால், ஹாசன் தொகுதியில் போட்டியிடும் நிலையில், இந்த நடவடிக்கையால் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
What's Your Reaction?