இந்திய மசாலாக்களால் புற்றுநோய்! உறுதி செய்த FSSAI..! கண்டறிவது எப்படி?

புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு உள்ளதாகக் கூறி இந்திய மசாலாப்பொருட்களுக்கு ஹாங்காங் - சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

May 15, 2024 - 13:10
இந்திய மசாலாக்களால் புற்றுநோய்! உறுதி செய்த FSSAI..! கண்டறிவது எப்படி?

இந்தியாவின் MDH நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 3 மசாலாப் பொடிகள் மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் ஒரு மசாலாப் பொடியின் விற்பனையை முன்னதாக ஹாங்காங் அதிரடியாக தடை செய்தது. அதேபோன்று எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன்குழம்பு மசாலா கலவையை சிங்கப்பூர் அரசு நிர்வாகம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது. தொடர்ந்து இந்திய மசாலா நிறுவனங்கள் தயாரித்த இந்த மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லிகள் இருப்பதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஆய்வு நடத்தி வருகிறது. தொழில்துறையில் பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் எத்திலீன் ஆக்ஸைடு, இந்திய மசாலாக்களில் சேர்க்கப்பட்டதே இதற்கான காரணமாக கூறப்பட்டது.

எத்திலீன் ஆக்ஸைடு என்பது என்ன?

நிறமற்ற எரியக்கூடிய வாயுவாக எத்திலீன் ஆக்ஸைடு அறியப்படுகிறது. புகைபோக்கிகள், பூச்சிக்கொல்லிகள், கருத்தடை மருந்துகள் தயாரிப்பில் இது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. நுண்ணுயிர் மாசுபாட்டை அகற்றவும் பூச்சிகளை கட்டுப்படுத்தவும் மசாலா மற்றும் உலர் உணவுகளில் எத்திலீன் ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்கும் காரணிகள் இந்த எத்திலீன் ஆச்சைடில் உறுதியாக உள்ளதாக சிங்கப்பூர் தெரிவித்தது. குறைந்தளவு எத்திலீன் ஆக்சைடை எடுத்துக் கொள்வதில் உடனடி ஆபத்து இல்லை என்ற போதும், நீண்ட கால பயன்பாடு உடல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் பதில் என்ன?

இதற்கு பதிலளித்த மத்திய அரசு, இந்திய மசாலாக்களில் 10 மடங்கு அதிக பூச்சிக்கொல்லி எச்சங்களை அனுமதிப்பதாக சில ஊடகங்கள் கூறுவதில் உண்மையில்லை என அறிவித்தது. அத்தகைய அறிக்கைகள் தவறான விளக்கங்களை அளிப்பதாகவும், உணவுப்பொருட்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்வதில் இந்தியா கடுமையாக உழைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எங்கள் மசாலாப் பொருட்களை சேமித்து வைப்பது, பதப்படுத்துவது, பேக்கிங் செய்வது என்ற எந்த நிலையிலும் எத்திலீன் ஆச்சைடு பயன்படுத்தப்பட மாட்டாது என்பதை உறுதியளிக்கிறோம் எனவும் மத்திய அரசு அறிவித்தது. சிங்கப்பூர் - ஹாங்காங் அதிகாரிகளிடம் இருந்து எந்த அறிக்கையும் கிடைக்கப் பெறவில்லை எனவும் கூறப்பட்டது.

இந்தியாவின் புதிய விளக்கம் என்ன?

இந்நிலையில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மசாலாப் பொருட்களில் எத்திலீன் ஆக்சைடைக் கண்டறிய ஒரு புதிய முறையை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மிகவும் துல்லியமான இந்த முறையை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் அங்கீகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும், இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள மசாலா பொருட்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தொடர்ந்து சிங்கப்பூர் - ஹாங்காங்கில் இந்திய மசாலாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது பூதாகரமான நிலையில், இந்தியாவின் இம்முயற்சி பலனளிக்குமா என்பது பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.....

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow