முதன்முறையாக அயோத்தி சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு... ராமர் கோயிலில் சாமி தரிசனம்
குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு அயோத்தியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன
உத்தரபிரதேச மாநிலத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அயோத்தி ராமர் கோயிலுக்கு முதன்முறையாக சென்று தரிசனம் மேற்கொண்டார்.
உலகப் புகழ் பெற்ற அயோத்தி ராமர் கோயில், கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி பால ராமரின் பிரான பிரதிஷ்டை நடத்தப்பட்டு, கோயில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. நாட்டில் உள்ள இந்துக்களின் உணர்வுப் பூர்வமான விழாவாக கருதப்பட்ட ராமர் கோயில் திறப்பு நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, பால ராமரை பிரான பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார்.
அப்போது பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் என பிரபலங்கள் பலர் அந்த நிகழ்வில் பங்கேற்றனர். ஆனால், நாட்டின் முதல் பிரஜை என்று கருதப்படும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொள்ளவில்லை. ஆனால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
முதல் நாள் கோயில் திறப்புக்குப் பின்னர் நாள்தோறும் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்வையிடும், நாட்டின் முக்கிய வழிபாட்டுத் தலமாக அயோத்தி ராமர் கோயில் மாறியது. ராமர் கோயில் திறப்பை ஒட்டி, அயோத்தி நகரமே மறுசீரமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. அதன் பின்னர் தற்போதுவரை குறைந்தது நாள் ஒன்றுக்கு 2 லட்சம் பேர் வரை மக்கள் சென்று வழிபாடு நடத்தும் கோயிலான அயோத்தி ராமர் கோயில் திகழ்ந்து வருகிறது.
இதற்கிடையில் உத்தரபிரதேச மாநிலத்திற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அயோத்தி ராமர் கோயிலுக்கு தரிசனம் செய்ய வருகை தந்தார். அவர் வருகையை முன்னிட்டு அயோத்தியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ராமர் கோயிலில் நடத்தப்படும் அனுமன் ஆரத்தியை அவர் கண்டு தரிசனம் செய்தார்.
ஏற்கனவே புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவிலும் குடியரசுத் தலைவர் கலந்துகொள்ளாத நிலையில், அது பேசுபொருளானது. அதேபோல் ராமர் கோயில் திறப்பு விழாவிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இதைக் குறிப்பிட்டு, குடியரசுத் தலைவரை பாஜக புறக்கணிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
நாட்டின் முதல் குடிமகளாக உள்ளபோதும், ராமர் கோயில் திறப்புவிழாவுக்கே அவர் அழைக்கப்படாத நிலையில், இன்று தாமாக சென்று பால ராமரை அவர் தரிசனம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?