சித்ரா பௌர்ணமி.. கிரிவலம் வர தயாராகும் பக்தர்கள்.. திருவண்ணாமலைக்கு 2,500 சிறப்பு பேருந்துகள்..5,000 காவலர்கள் பாதுகாப்பு
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 2,500 க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட உள்ளன. 5,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி சிறப்பு வாய்ந்தது. பௌர்ணமி நிலவில் ஆற்றங்கரைகளில் கூடி சித்ர அன்னம் சமைத்து கொண்டு வந்து உறவுகளுடன் கூடி சாப்பிடுவார்கள். காலம் காலமாக சித்ரா பௌர்ணமி விழா தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. கள்ளழகர் வைகையில் எழுந்தருளுவதும் சித்ரா பௌர்ணமி நாளில்தான்.
மலையே சிவமாக வணங்கப்படும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் வந்து வழிபடுகின்றனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளுவதால் ஒவ்வொரு மாதமும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி இன்று திங்கட்கிழமை ( ஏப்ரல் 22) மாலை 5.55 மணிக்கு தொடங்குகிறது. ஏப்ரல் 23ஆம் தேதியன்று இரவு 7.48 மணி வரைக்கும் பௌர்ணமி திதி உள்ளது. இன்று மாலை 6 மணியில் இருந்து நாளை இரவு 8 மணி வரைக்கும் கிரிவலம் வருவதற்கு நல்ல நேரமாகும்.
நாளைய தினம் சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்படுவதால் இன்று மாலை முதலே திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்லத் தொடங்குவார்கள். அதனை முன்னிட்டு இன்று திருவண்ணாமலைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இன்றும், நாளையும் மொத்தம் 2,500 சிறப்பு பேருந்துகள் பல பகுதிகளில் இருந்தும் இயக்கப்பட உள்ளன.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்றைய தினம் 527 சிறப்பு பேருந்துகளும், நாளைய தினம் 628 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மாதவரத்தில் இருந்து இன்றும், நாளையும் தலா 30 பேருந்துகளும், மேலும் சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து மொத்தம் 90 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
கோடைக்காலம் என்பதால் கிளாம்பாக்கத்தில் இருந்து இன்றும், நாளையும் 40 குளிர்சாதன பேருந்துகளும் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன. சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், நெல்லை, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile APP மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இந்த வசதியினை பொதுமக்கள் பயன்டுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என்பதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு டிஐஜிக்கள் தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட எஸ்.பிக்கள் உள்ளிட்ட சுமார் 5,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
What's Your Reaction?