சம்பளம் தராத TCS நிறுவனம்.. நூதனமாக போராடிய ஊழியர்!

தான் பணிபுரிந்து வந்த TCS நிறுவனம் சம்பளம் தரவில்லை என, நிறுவனத்தின் நடைபாதையில் தூங்கி போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இணையத்தில் இது பேசுப் பொருளாகிய நிலையில் TCS நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

சம்பளம் தராத TCS நிறுவனம்.. நூதனமாக போராடிய ஊழியர்!
tcs employee protests for unpaid salary by sleeping on sidewalk

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கும் TCS நிறுவனம் சமீபத்தில் 12,000 ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்தது டெக் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் சூடு குறைவதற்குள், புனேயில் உள்ள TCS நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர் நிறுவனத்திற்கு வெளியே நூதன முறையில் போராட்டம் நடத்தியது இணையத்தில் பேசுப்பொருளாகியது.

சவுரப் மோர் என்கிற அந்த நபர், தனக்கு தரவேண்டிய பல மாத சம்பளத்தை TCS நிறுவனம் தரவில்லை என குற்றச்சாட்டு வைத்துள்ளார். கடந்த ஜூலை 29 ஆம் தேதி சஹ்யாத்ரி பூங்காவில் அமைந்துள்ள தனது TCS அலுவலகத்திற்கு வருகைத் தந்துள்ளார். அப்போது அவரது பணியாளர் ஐடி வேலை செய்யவில்லை. இதுத்தொடர்பாக அந்நிறுவனத்தின் HR-ஐ தொடர்பு கொண்டுள்ளார். விரைவில் சம்பளம் வழங்குவதாக HR உறுதியளித்துள்ளார். ஆனால், சம்பளம் வழங்காமல் இருந்துள்ளனர்.

இதனையடுத்து, என்னிடம் வேறு பணம் இல்லாத நிலையில் சம்பளத்தை உடனடியாக வழங்குமாறு TCS நிறுவனத்தின் HR-யிடம் தெரிவித்த சவுரப், சம்பளம் வழங்கும் வரை TCS நிறுவனத்திற்கு வெளியே நடைபாதையில் தான் தூங்கவும், வாழவும் போகிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்த விவரத்தை கைப்பட கடிதம் ஒன்றில் எழுதி தன் அருகே வைத்துக்கொண்டு, TCS நிறுவனத்திற்கு வெளியே தூங்கினார் சவுரப். இதுத்தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. பல பயனர்கள் TCS நிறுவனத்தை கடுமையாக தாக்கி பதிவிட்டு வந்தனர்.

பணி நீக்கம் செய்தது எதனால்?

இந்நிலையில், TCS நிறுவனம் இந்த விவகாரத்தில் மௌனம் கலைத்துள்ளது. இதுத்தொடர்பாக TCS  நிறுவனம் சார்பில் கூறுகையில், “சம்மந்தப்பட்ட ஊழியர் உரிய அனுமதியின்றி வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதுப்போன்ற சூழ்நிலைகளில் ஊழியரின் சம்பளத்தை நிறுத்திவைப்பது வழக்கமான நடவடிக்கைகளுள் ஒன்று. ஊழியரின் விளக்கத்தை அடுத்து தற்போது மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார். அவருக்கு தற்போதைக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளோம். அவரது நிலைமையை உணர்ந்து ஆக்கப்பூர்வமான முறையில் நிவர்த்தி செய்ய ஆதரவளிப்போம்” என TCS நிறுவனம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow