பிரதமரின் ரோட் ஷோ... மலர் பாதைகளான சாலைகள்... "இது மோடியின் குடும்பம்"

சென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தியாகராய நகரில் திறந்தவெளி வாகனத்தில் வாக்குசேகரித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மலர் தூவியும், முழக்கமிட்டும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Apr 9, 2024 - 22:02
பிரதமரின் ரோட் ஷோ... மலர் பாதைகளான சாலைகள்... "இது மோடியின் குடும்பம்"

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தமிழத்திற்கு வருகை தந்து பாஜக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். 


இந்நிலையில் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு விமானநிலையத்தில் பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து சென்னை தியாகராய நகரில்  பிரதமரின் பிரமாண்ட ரோடு ஷோ நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் சாலையின் இருபுறங்களிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், பிரதமரின் வாகனம் மீது மலர்களை தூவி வரவேற்பு அளித்தனர். மேலும் மோடியின் குடும்பம் நாங்கள் என்ற பதாகைகளை கையில் ஏந்தியும் முழக்கங்களை எழுப்பினர். அப்போது பிரதமர் மோடி பொதுமக்களை நோக்கி கைகளை அசைத்து உற்சாகப்படுத்தினார்.     


இந்த நிகழ்வில், தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் வினோஜ் பி.செல்வம், வடசென்னை தொகுதியில் போட்டியிடும் பால் கனகராஜ் உள்ளிட்டோர் பிரதமர் பயணித்த வாகனத்தில் நின்றிருந்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக கையில் தாமரை சின்னத்தை காண்பித்து பிரதமர் வாக்கு சேகரித்தார். 


ரோட் ஷோ நிகழ்ச்சியில் காளி வேடமணிந்தவர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நடனமாடியும்,   நாதஸ்வர கலைஞர்கள் இசை வாசித்தும், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். தியாகராய நகரின் பனகல் பார்க்கில் தொடங்கிய இந்த ரோட் ஷோ நிகழ்ச்சியானது, சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று தேனாம்பேட்டை சிக்னல் அருகே நிறைவடைந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow