மீண்டும் அதிமுக - தேமுதிக - பாஜக கூட்டணியா? ஒன்றிணைந்த கட்சிகள்... காரணம் என்ன?
மத்திய பாஜக அரசு திட்டமிட்டு வரும் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக, தேமுதிக கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், இரண்டு கட்சிகளும் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்க ரெடியாகி வருகின்றதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு, அறிக்கை ஒன்றை சமர்பித்து இருந்தது. இந்த அறிக்கையை செப்டம்பர் 18 ஆம் தேதி அன்று மத்திய அமைச்சரவை ஒருமனதாக ஏற்றுக்கொண்ட நிலையில், இதுதொடர்பான மசோதா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இதற்கு ஆளும் கட்சியாக இருந்தபோது எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, தற்போது ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதோடு, தேமுதிகவும் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
பாஜகவுடன் கூட்டணியில் இருந்த காலக்கட்டத்தில், ஆட்சி அதிகாரத்தை பறிப்பதாகக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது அதிமுக. இதனைத் தொடர்ந்து சில கருத்து வேறுபாடு காரணமாக அதிமுக – பாஜக கூட்டணி முறிவை சந்தித்த நிலையில், மீண்டும் இக்கூட்டணி இணையுமா என்ற கேள்விகள் எழுப்பபட்டன. ஆனால், அண்ணாமலை தலைமை இருக்கும்வரை பாஜகவுடன் அதிமுக கூட்டு சேராது என்று அதிமுகவினர் திட்டவட்டமாக தெரிவித்தனர். அதேநேரம், அதிமுக தரப்பினர் பாஜக டெல்லி மேலிடத்தில் நெருக்கம் காட்டி வந்தனர். இதனால் அதிமுக – பாஜக கூட்டணி முறிவு வெறும் தற்காலிக முடிவு மட்டும்தான் என்று அரசியல விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வந்தனர்.
2024 மக்களவைத் தேர்தலிலும் அதிமுக, பாஜக தலைமையில் தனித்தனி கூட்டணி உருவானது. தேமுதிக அதிமுகவுடனும், பாமக பாஜகவுடனும் கூட்டணி சேர்ந்தன. அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தவுடன் பாஜக கடுமையாக எதிர்த்தது தேமுதிக. இந்த நிலையில், பாஜக கொண்டுவர நினைக்கும் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக, தேமுதிக கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதால், மீண்டும் அதிமுக- பாஜக – தேமுதிக கூட்டணி உருவாகலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதோடு மீண்டும் பாஜகவுடன் இணைவதற்காகத்தான முதல் அடியாக ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு அதிமுகவும் தேமுதிகவும் ஆதரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் அதிமுக – தேமுதிக, பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைப்பார்களா? இதற்கு அண்ணாமலை, எடப்பாடி பழனிச்சாமி ஒத்துழைப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
What's Your Reaction?